கொரோனாவின் தாக்கம் சென்னையை பயமுறுத்த, மறுபக்கம் வீட்டு ஞாபகம்.. தனிமையை உணர்ந்த தருணங்களை முறியடிக்க வீட்டுக்கு செல்ல முயற்சித்தேன்.

4 முறை நிராகரிப்புக்கு பின் எதிர்பாராத நேரத்தில் கிடைத்த இ- பாஸ் மூலம் மே 20 ஆம் தேதி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வந்தேன்.வெகு நாட்களுக்கு பிறகு அப்பாவின் அரவணைப்பு, அம்மாவின் பாசம்,அண்ணாவின் செல்லமான குறும்புகள், வீட்டிலிருந்த படியே வேலை (Work from Home) என நாட்கள் அழகாகத்தான் சென்றன.
(ஜூன் 13) 22 நாட்களுக்கு பிறகு எனக்கு கொரோனா பரிசோதனை எடுத்தே ஆக வேண்டும் என்று வீட்டிற்கு காலையே வந்த உள்ளூர் சுகாதார அதிகாரி கூறினார்.காலம் கடந்து விட்டது என்று வலியுறுத்தியும் ஏற்க மறுத்த அதிகாரியிடம் விவாதிப்பதை நிறுத்திவிட்டு, அன்று மதியமே பரிசோதனை எடுத்தேன்.
அடுத்த நாள் (ஜூன் 14) இரவு “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” என குடும்பத்துடன் சிரித்து பேசிக் கொண்டிருக்கையில், அண்ணனின் அலைபேசி சிணுங்க அவரது முகம் மாற ஆரம்பித்தது. என்ன ஆச்சு டா என்று கேட்க, எனக்கு கொரோனா பரிசோதனையின் முடிவு “பாசிட்டிவ்” என அழுதுகொண்டே அண்ணன் கூறினார்.
அவ்வளவு அழகான நேரத்தில் யார் கண் பட்டது என தெரியவில்லை முழு குடும்பமும் சோகமானது. மருத்துவ முகாமுக்கு செல்ல தயாரானேன். நள்ளிரவு 11.30 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்து என்னை அழைத்துச் சென்ற தருணத்தை இப்போது நினைத்தால் கூட பதட்டமாகத்தான் இருக்கிறது. நல்ல வேளை இரவு நேரம் வந்து அழைத்து போனார்களே என்று மனதின் ஓரம் சிறு ஆறுதால் அடைந்தேன். ஆனால் அடுத்த நாள் காலையிலேயே “வடிவேலுவின் பேக்கரி” காமெடி போல் ஊருக்கே தெரிந்துவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அன்று இரவு நான் முகாமிற்கு சென்றேன். அப்படி ஒரு நிலையினை நான் சந்தித்தது இல்லை…தங்குவதற்கு படுக்கை கூட இல்லை தரையில் படுக்க அங்கிருக்கும் செவிலியர்கள் கூற, மின் விசிறி இல்லாத படுக்கை எனக்கு கொடுத்தார்கள். ஆனால் ஒரு பாட்டி மறுநாள் அங்கிருந்து புறப்பட இருப்பதால் தனது படுக்கையினை பகிர்ந்தார். அப்பாடா கொஞ்சம் காற்று வசதி இருக்கிறது என மனதில் ஒரு திருப்தி.

தனிமையின் தருணத்தை ரசித்து பழகிய எனக்கு இந்த தனிமை மன சோர்வைதான் ஏற்படுத்தியது.இந்த தனிமையினை விரட்டுபவர்களாக, தோள்களின் ஆறுதலாக கொஞ்சம் அலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ் அப் உரையாடல் என நாட்கள் நகர்ந்தன. (இந்த 10 நாட்களும் நட்புகள் ஆறுதல் கொடுத்தனர். அதை நான் மறவேன்) அந்த சூழ்நிலையை பழக ஆரம்பித்த போது, 4 வது நாள் வார்டில் இருந்த ஒரு மூதாட்டி கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் என் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் வீட்டில் அனைவருக்கும் பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்ற மகிழ்ச்சியான செய்தி எனக்கு ஆறுதலை கொடுத்தது.
இதற்கிடையே முக்கியமான ஒன்றை குறிப்பிட வேண்டும்.நாங்கள் இருந்த முகாமில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தரவில்லை என்று போராட்டம் வேறு நடத்தினோம். (நம்ம முகற வேற நியூஸ்லலாம் போச்சு)நம்ம இருந்தாலே தரமான சம்பவம் இருக்கு போல என மனதில் நினைத்து கொண்டேன்.

ஜுன் 23 எனக்கு மறு முறையும் கொரோனா பரிசோதனை எடுத்தார்கள். இந்த முறை நெகடிவ் என வந்தது. “கிளம்பிட்டாலே கிளம்பிட்டாலே விஜயலெட்சுமிணு” மீண்டும் மறுபடியும் வீட்டுக்கு வந்து விட்டேன். மீண்டும் அப்பாவின் அரவணைப்பும் அம்மாவின் கவனிப்பும் அண்ணாவின் பாசமும் தொடர்கிறது.. “back to எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை”
அப்புறம் ஒரு நிமிஷம் கொரோனாவிற்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையினை கூற மறுந்துவிட்டேன். காலையில் Oxygen, Pulse, Temperature ஆகிய பரிசோதனை செய்தார்கள்.சத்து மாத்திரை, சளி மாத்திரை என 8 மாத்திரை ஒரு வேளைக்கு கொடுத்தார்கள்
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாத்திரையுடன் மாஸ்க்கும் கொடுப்பார்கள்,
இதிலிருந்து புதிதாக ஒரு பழக்கம் வந்து விட்டது. என் வாழ்நாளில் வெந்நீரை தொட்டதில்லை. தற்போது குளிக்க, குடிக்க, என் முகம் கழுவக் கூட வெந்நீர் தான். ஆனாலும் இதுவும் கடந்து போகும்
இப்போது நான் மகிழ்ச்சி தான். ஒரு வேளை உங்கள் நண்பர்களுக்கோ, உறவுகளுக்கோ கொரோனா பாதித்து இருந்தால் அவர்களை ஒதுக்காமல், அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறுங்கள். “ஆறுதலை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை உலகிலே”.
-பிரிய தர்ஷினி