ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று விருப்ப ஓய்வு பெறுவதற்காக விண்ணப்பம் செய்திருந்தார். அதில், விருப்ப ஓய்வுக்கான காரணமாக, “சமூகத்துக்காக நான் நேர்மையாக செய்ய வேண்டிய பங்களிப்புக்கான உரிமை மறுக்கப்படுகிறது” என்று தெரிவித்திருந்தார். விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் ஜனவரி 2ம் தேதியுடன் முடிவடைந்தது.
கடைசி ஆசையும் நிராகரிப்பு
அக்டோபர் மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று விருப்ப ஓய்வு பெருவதற்காக விண்ணப்பம் செய்திருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், அதில் காந்தியின் இறந்த தினமான ஜனவரி 31ம் தேதி தன்னை அரசு பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால்,அரசு அவரின் கடைசி ஆசையை கூட பரிசீலிக்காமல் ஜனவரி 6ஆம் தேதி முறையாக அரசு பணிகளில் இருந்து விடுவித்துள்ளது.
தன் நேர்மையான செயல்பாடுகள் மூலம் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த அதிகாரிகளில் ஒருவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயம். சகாயம் என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது மதுரை கிரானைட் ஊழல் தான். சகாயம் அவர்கள் மதுரை ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த போது, 2012 ஆம் ஆண்டு கிரானைட் முறைகேடுகள் அவரின் கவனத்துக்கு வந்தது. அதன்பின், அந்த வழக்கின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, முழுமையாக விசாரித்து 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் வெளிவந்தது கிரானைட் நிறுவனங்களின் ஊழல் மட்டுமல்ல பல அரசு அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள், தொல்லியல்துறை அதிகாரிகளின் ஊழலும் சேர்ந்தே வெளிவந்தது.
இந்த கிரானைட் ஊழலில் அரசுக்கு சுமார் 1 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதை விட அதிகமாக பாதிக்கப்பட்டது அந்த பகுதியின் சுற்றுவட்டாராங்களில் இருந்த பொதுமக்கள் தான். வெடிவைத்து கிரானைட் கற்களை உடைக்கும் போது, ஏற்படும் அதிர்வுகளால் அங்கு உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டு எந்த நேரம் இடிந்து விழுமோ, என்ற நிலையில் இருந்தது. இதனால் அங்கு உள்ள மக்கள் தங்கள் நிலங்களை கிரானைட் நிறுவன முதலாளிகளிடம் விற்று விட்டு சென்று விட்டனர். இதைவிட கொடுமையான விஷயம் அங்கு நடைபெற்ற நரபலிகள். எவ்வித சந்தேகங்களும்,பிரச்சனைகளும் வரக்கூடாது என, ஏழைகள், மனநலம் குன்றியவர்கள், ஆதரவற்றோர்கள், தன் குடும்பங்களால் கைவிடப்பட்டோர்களை ரயில் நிலையங்களிலும், பொது இடங்களிலும் இருந்து கொண்டுவந்து நரபலி கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். இவ்வாறு, அந்த நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரிந்தவர் தெரிவித்துள்ளார்.இந்த எல்லா ஊழலையும் வெளியே கொண்டு வந்தவர் நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்.
இந்த வழக்கின் விசாரனையை கையில் எடுத்த பின்,.கோ – ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராகவும், இந்திய மருத்துவத்துறை இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டார். பின், 2014 முதல் தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டு 7 ஆண்டுகளாக அதே பணியில் நீடித்து வருகிறார். தனக்கு பதவி காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் தற்போதே விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். ஊழலுக்கு எதிராக செயல்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரியே, “சமூகத்துக்காக நான் நேர்மையாக செய்ய வேண்டிய பங்களிப்புக்கான உரிமை மறுக்கப்படுகிறது” என்று கூறி விருப்ப ஓய்வு பெறுவது அப்படியே சாதாரணமாக கடந்து போக வேண்டிய விஷயம் அல்ல.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது அந்த காலம்; அதிகாரிகளாய் பார்த்து திருந்தாவிட்டால் ஊழலை ஒழிக்க முடியாது என்பது இந்த காலம்.