2.0 படத்தில் ஒரு காட்சி இருக்கும். பறவைகள் எல்லாம் செத்து தரையில் கிடக்கும். அதைப் பார்க்கும் போது இதுனா உண்மையாங்க, இப்படிலாம் நடக்குமா என்று நமக்கு தோன்றலாம். ஆனால், அதே மாதிரி ஒரு சம்பவம் ரோம் நகரில் நடந்துள்ளது. ரோம் நகர தெருக்களில் தானியங்களை கொட்டியது போல் பறவைகள் செத்து கிடக்கிறது. சரி, ஏன் திடீரென பறவைகள் இப்படி செத்து கிடக்கிறது என்று பார்க்கும் போது, ரோம் நகர மக்களின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தான் காரணம் என தெரிய வந்துள்ளது.
புத்தாண்டில் பிரம்மாண்டமாக வெடி வெடித்து கொண்டாடும் வழக்கம் மேலை நாடுகளில் உள்ளது. திடீரென ஏற்பட்ட வெடி சத்தத்தால் பறவைகள் திகைத்து போய், அங்கும் இங்கும் அலைந்து கட்டடங்களில் மோதி பலியாகியுள்ளன.
கொரனோ காலம் என்பதால் மக்கள் அதிகமாக கூடும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெடி வெடிப்பதற்கும் டிசம்பர் 30 முதல் ஜனவரி 7 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளதாக ரோம் நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.
2.0 படத்தில் பறவைகளின் இறப்புக்கு காரணமாக சொல்லப்படுவது செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள். ஆனால், அது மட்டுமே காரணம் என இன்னும் நிரூபிக்கப்படவில்லை. பட்டாசு வெடிப்பதால் மட்டும் தான் பறவை இறக்கிறது என்று சொல்ல முடியாது.
திடீரென ஏற்பட்ட பயங்கர சத்தத்தால் மிரண்டு தப்பிக்க நினைத்து தங்களுக்குள்ளும், கட்டங்களிலும் மோதி இறந்துள்ளது. பறவைகள்இயற்கை சீற்றங்களை முன்பே அறிந்து வேறு இடத்திற்கு பறந்து சென்று தங்களை காப்பாற்றிக் கொள்ளும். ஆனால், செயற்கையாக ஏற்படும் சத்தங்களை கணிக்க முடியாமல் இப்படி செத்து விடுகிறது. பறவைகள் விமானங்களில் மோதி இறப்பதும் அடிக்கடி நடக்கும் விஷயம். முந்தைய காலத்தில் பறவைகள் வீடுகளில் மனிதர்கள் உடனே வசித்து வந்தது. அதிகரித்து விட்ட அடுக்குமாடி குடியிருப்புகளால் மனிதர்களுடன் இருந்த பறவைகளின் தொடர்பு இல்லாமல் போய் விட்டது. மரங்களை அழித்து கட்டிடங்கள் கட்டி வந்துவிட்ட மனித ஆக்கிரமிப்புகளால், அங்கும் பறவைகளின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கிடையே கொண்டாட்டங்கள் என்ற பெயரில் நாம் தரும் தொல்லைகள்.
2.0 படத்தில் பறவைகளை காக்க பட்சிராஜன் வருவான். தமிழகத்தில், பறவைகள் சரணாயலங்கள் அதிகம் உள்ள இடங்களில் இன்னும் கூட தீபாவளிக்கு பட்டாசு வெடித்து சத்தம் ஏற்படுத்தாமல் அமைதியாக கொண்டாடுகிறார்கள். இவர்கள் அனைவரும் பட்சிராஜன்கள் தான். நாம் அனைவரும் பட்சி ராஜன் ஆவது எப்போது?