தமிழக அரசியலில் ரஜினி ஆரம்பிக்கும் கட்சி திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆர்வலர்கள் காத்திருந்தனர். ஆனால் நடந்த கதை வேறு. “மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லனா எப்பவுமே இல்ல” என்று கூறி வந்தார். திடீரென தன் உடல் நிலையை காரணம் காட்டி “இப்பவும் இல்ல, எப்பவும் இல்ல” என காலங்காலமாய் காத்திருந்த தம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆனாலும், விடாத ரசிகர்கள், ரஜினி அரசியல் வாழ்க்கையைப் பற்றி மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர்.
இதே போன்று ஒரு சம்பவம் கடந்த காலத்திலும் நடந்துள்ளது. தன் தலைவன் தனிகட்சி தொடங்கி அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தியதால் கட்சி தொடங்கினார் ஓர் தலைவர். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான் அது. உண்மையில் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய வருடம் 1972.
சி.என். அண்ணாதுரை ஏற்படுத்திய கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார் எம்.ஜி.ஆர். சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் கட்சியில் சேர்ந்து முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது இல்லை. அண்ணாதுரை இறந்த பிறகு, இரா.நெடுஞ்செழியனுக்கும், கருணாநிதிக்கும் யார் முதல்வர் என்ற அதிகாரப்போட்டி வந்தது.
அப்பொழுது எம்.ஜி.ஆர் மட்டும் நினைத்திருந்தால் அந்த அதிகாரப்போட்டியை தான் பயன்படுத்தி முதல்வராகி இருக்க முடியும். ஆனால் கருணாநிதிக்கு ஆதரவை தெரிவித்து அவரை முதல்வராக்கினாரே தவிர அவர் முதல்வராகவில்லை. இந்த போட்டியில் ஏற்பட்ட சமரச பேச்சு வார்த்தையால் கருணாநிதி கட்சித்தலைவராகவும், இரா.நெடுஞ்செழியன் பொதுச்செயலாளராகவும், எம்.ஜி.ஆர் பொருளாளராகவும் பதவியேற்றனர்.
1971ல் மு.கருணிநிதி தலைமையில் இரண்டாவது முறை திமுக ஆட்சி அமைத்தது. அப்போதும் சினிமாவில் இருந்து விலக நினைக்காத எம்.ஜி.ஆர் அமைச்சர் பதவி மட்டும் கேட்டார். ஆனால் அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதனால் கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்கும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மோதல் போக்கு இருந்தது.
திமுக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் வர ஆரம்பித்தது. எம்.ஜி.ஆருக்கு மக்களிடையே அதிக செல்வாக்கு வர காரணம் அவர் படத்தில் வந்த புரட்சி வசனங்கள். தன் படத்தில் தான் பேசி நடித்த புரட்சி தன் அரசியல் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். திமுகவில் பொருளாளராக இருப்பதால், ஊழல் குற்றச்சாட்டினால் மக்களிடம் தனக்கு இருக்கும் நல்லபெயர் கெட்டுவிடும் என்று எண்ணிய எம்.ஜி.ஆர் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
1972 ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் நபைபெற்ற கூட்டத்தில் முதல்முறையாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார். கட்சியில் உள்ளவர்கள் தங்கள் சொத்து பற்றி கணக்கு காட்ட வேண்டும். இதை பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப் போகிறேன். ஒவ்வொருவரும் சொத்து கணக்கு காட்டி தங்கள் கை சுத்தமானது என்று மக்களிடம் நிரூபிக்க வேண்டும் என்று தன் உரையை முடித்தார்.
அக்டோபர் 12ஆம் தேதி பொதுக்குழு நடைபெற இருந்தது. ஆனால், அக்டோபர் 11 ஆம் தேதி, 32 செயற்குழு உறுப்பினர்களில் 26 உறுப்பினர்களின் ஆதரவுடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். அதன்பின், கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் எல்லாம் அவருக்கு இல்லை.
எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை அறிந்ததும் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த ரசிகர்கள் தனிகட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.சிலர் கட்சி ஆரம்பிக்காவிட்டால் தீக்குளித்து விடுவேன் என்று அன்பு மிரட்டல் இடுகிறார்கள். கடைசியாக, 1972 அக்டோபர் 17ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்குகிறார். அதன் பின் தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.ஆர் ஆற்றிய பங்கு தனி கதை.
ரஜினி, உடல்நிலை காரணத்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்துவிட்டாலும், விடாமல் போராடுகிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் நான் அரசியலுக்கு நிச்சயம் வரமாட்டேன் என்றும் மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார் ரஜினி.