2015 ல் சென்னையில் ஏற்படுத்தப்பட்ட வெள்ளம், 2016 ல் தாக்கிய வர்தா புயல் , 2018 ல் டெல்டாவை தாக்கிய கஜா புயல் , தற்போது வந்த நிவர் புயலின் போது அரசின் செயல்பாடுகள் பற்றி மக்கள் நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள்.
பருவமழைக் காலத்தில் ஏற்படும் புயல், தமிழகக் கடற்கரையை கடக்கும்போது அதிவேகத்துடன் காற்று வீசுவதோடு, கனமழையும் பெய்யும். இதன் காரணமாக இயற்கை வளங்கள், தோப்புக்கள், மரங்கள், பயிர்கள், மக்களின் உடைமைகள் ஆகியவற்றிற்கு பெருத்த சேதம் ஏற்படும்.
இத்தகைய இயற்கை சீற்றம் வழக்கமானது அதேபோல் அரசின் இந்த செயலற்ற தன்மையும் வழக்கமாகிவிட்டதால் பொது மக்கள் அனைத்தையும் சகித்துக் கொண்டு தங்கள் பணிகளை தொடர்ந்தார்கள். தனி மனிதனாக இருந்தாலும், அரசு இயந்திரமாக இருந்தாலும் ஒரு முறை செய்த தவறை மீண்டும் செய்தால் அதன் பெயர் அக்கறையின்மை.
முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டதாக அரசு அறிவித்தாலும், புயலுக்கு முன் மழை தொடங்கிய சில மணி நேரங்களிலே தமிழகத்தின் பிரதான சாலையாகிய அண்ணா சாலையில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியது, சாலையில் தாங்கள் நிறுத்திய வாகனங்களை முழ்கிய தண்ணீரில் தேடினார்கள் மக்கள்.
வெள்ள எச்சரிக்கை, விடுமுறை, பேருந்துகள் நிறுத்தம் மட்டும் முன்னேற்பாடுகள் இல்லை, வெள்ள எச்சரிக்கையால் ஆற்றங்கரையில் தங்கி இருக்கும் மக்களை வேறு தகுந்த முகாம்களில் தங்கச் செய்வதும் அரசின் கடமையே, ஆனால் வேறு முகாம் கிடைக்காமல் திண்டாடிய மக்களை கேட்டால் தான் தெரியும் அன்றிரவின் அச்சம்.
பேரிடர் மேலாண்மை குழு கிளம்பியது என்ற அறிவிப்புகள் தொடர்ந்தாலும், புயலினால் அதிக பாதிப்புகுள்ளாகும் சில கிராமங்கள் அதனை பற்றி தெரியாமலே இருந்தது செய்திகளின் வாயிலாக நாம் அறிந்தோம். மேலும் மீனவர்களின் படகுகளுக்கும், வலைகளுக்கும் பாதுகாப்பு தர வேண்டிய அரசு அதனை தராததால் அதற்காக போராட வேண்டிய நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டனர்.
புயல் மட்டும் இல்லாமல் தற்போது நோய் தொற்று பேரிடர் காலம் என்பதையும் அறிவுறுத்திக் கொண்டே இருக்க வேண்டியதும் கட்டாயம்.தோன்றியதை எல்லாம் செய்வதற்கு பெயர் பேரிடர் மேலாண்மை அல்ல, முன் கூட்டிய தீட்டிய திட்டத்தின் கொள்கை, செயல்பாடுகள், கண்காணித்தல், பாதுகாத்தல் ஆகியவற்றை பின்பற்றுதலும் வேண்டும்.
காலத்திற்கு ஏற்ப பருவநிலையில் பல மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு தான் வருகிறது.இதை மக்கள் விதி வழியே என்று கடந்து சென்றாலும்,மக்களை பாதுகாக்கும் அரசு அவ்வாறு கடந்து செல்வது மக்கள் விரும்பும் ஆட்சியாய் அமையாது.இந்த பேரிடர் காலங்கள் மக்களுக்கு பேராபத்து காலங்களாக அமையாமல் இருக்க,ஆளும் அரசிற்கு அந்த பேரிடர் காலங்கள் சவாலாய் இருந்து வருகிறது.மக்களை பாதுகாப்பதும் அரசின் தலையாய கடமை அதை சிறப்பாக செய்வதும்,அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் வெல்வதும் இவர்கள் தற்போது உள்ள ஆபத்தான சூழ்நிலையில் செய்யும் பணிகளை பொறுத்தே “மக்களின் தீர்ப்பு மகேசன் தீர்ப்பாய் மாறும்” மீண்டும் ஆட்சியில் ஏறும்..
கட்டுரையாளர்:ஜெயபாரதி