ஏரியை தூர் செய்வது, குடிநீர்,உணவு, உடை, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவது, கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களை தத்தெடுப்பது, இயற்கை சீற்றத்தின் போது தோள் கொடுப்பது, வறுமையில் வாடும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை செலுத்துவது என ஒரு அரசாங்கம் செய்யும் வேலையை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சத்தம் இல்லாமல் செய்து வருகிறார், ஜெ.ஜெயகிருஷ்ணன்.
கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் வீட்டில் முடங்கிய போது, வேலையும் இல்லாமல் சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கான உணவு கேள்விக்குறியானது. அப்போது அவர்களுக்கான உணவு, உடை என அனைத்து தேவைகளும் கிடைக்க உதவினார்.
கஜா புயலின் போதும், வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்ததுடன், அவர்கள் மறுவாழ்வு வாழ்வதற்கும் வழிவகை செய்து கொடுத்தார். 420 ஏக்கர் பரப்பளவில் இருந்த பெரும்பாக்கம் ஏரி, ஆக்கிரமிப்பின் காரணமாக 250 ஏக்கராக குறுகியது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த இந்த ஏரி பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்தது. இதனால் ஏரி, குளங்களை “சீரமைக்க களமிறங்குவோம் நமக்கு நாமே “என காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஜெ.ஜெயகிருஷ்ணன் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ரஜினி மக்கள் மன்றத்தினர் ஏரியை தூர்வாரினார். இதே போல் இவர், சிட்லப்பாக்கம் ஏரியை தூர்வாரி அசத்தினார். இதனால் அரசின் பாராட்டுதலையும் பெற்றார், ஜெயகிருஷ்ணன்.
கடந்த ஆண்டு, கடும் வறட்சி காரணமாக தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வந்த நிலையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதி மக்களின் தாகத்தை தீர்த்த இவர், சிறந்த எழுத்தாளரும் கூட.நம் வாழ்வியலை மீட்டெடுத்து ‘நல்லுடல்’ ‘நல்லெண்ணம்’ ‘நற்செயல்’ என்ற நோக்கங்களை கொண்டு ஆரோக்கியம் வளர்க்க மேம்பட்ட வாழ்க்கையை வாழ வளரும் தலைமுறைக்கும் வரும் தலைமுறைக்கும் வழிக்காட்ட தமிழின் முதல் லைஃப் ஸ்டைல் இதழான “புதிய வாழ்வியல்” மலரை நடத்தி வருகிறார்.
நவீன நகர்ப்புற வாழ்வின் அடிப்படையில் அன்றைய காலங்களில் இருந்து நாம் உணர்வுபூர்வமாக வெளியேறிவிட்டோம். பல அர்த்தமுள்ள மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் அவை அறிவியலற்றவை என்று நாம் கற்பனை செய்கின்றோம். ஆனால் ஜெயகிருஷ்ணன் கடந்த 25 ஆண்டுகளாக ஒரு ஆழமான ஆராய்ச்சியை மேற்கொண்டு நமது பாரம்பரிய பழக்கவழக்கங்களில் பெரும்பாலானவை அவற்றின் பின்னால் ஒரு தனித்துவமான அறிவியலை கொண்டு உள்ளது என்று கண்டறிந்தார். அதில் எந்த நவீன கல்வி நிறுவனத்திலும் கல்வி என்பது கற்பிக்கப்படுவதில்லை. அந்த கல்வியானது ஒவ்வொரு பாரம்பரியத்தில் இருந்து பெறப்பட்டது என்ற அடிப்படையில் அவர் எழுதிய புத்தகம் தான் “பாரம்பரிய அறிவியல்”.
கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் கல்வித் தரத்தை எப்படி உயர்த்துவது என்பது அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் பெரும்சவாலாக இருந்தது. அந்த சமயத்தில் அரசு கொண்டு வந்த திட்டம் தான் பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டம்.
பள்ளிகளுக்கான கட்டமைப்பு, ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பல பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்து காணப்பட்டது. 2012ம் ஆண்டு தேர்ச்சியில் கடைசி இடம் பிடித்த விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 20 பள்ளிகளைக் கண்டறிந்து 77 ஆசியர்களை நியமித்தார் ஜெயகிருஷ்ணன். அப்பள்ளிகளுக்கு தூய்மைப் பணியாளர்களையும் நியமித்து ஊதியம் வழங்கி, மாலை வேளைகளில் சிறப்பு வகுப்பின் போது மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், வேலூரில் மாணவர்களின் தேர்வுக்கு உதவும் வகையில் ஐந்தரை லட்சம் வினா-வங்கி புத்தகங்களை வழங்கினார். பொதுத்தேர்வுகளை எழுதும் நேரத்தில் ஏற்படும் அச்சங்களைக் களைய சிகரம் தொடு எனும் தன்னம்பிக்கை நிகழ்ச்சியையும் நடத்தி உற்சாகமூட்டியவர் அவரது துணைவியார் காமாட்சி ஜெயகிருஷ்ணன். 16 சதவிகிதமாக இருந்த விழுப்புரம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவிகிதம் 74 சதவிகிதம் உயர்ந்ததாகப் பாராட்டினார் அப்போதைய மாவட்ட ஆட்சியர் சம்பத்.
வேலூரில் தத்தெடுத்த பள்ளிகளில் 100 ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு மாதம் 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை சம்பளமாக வழங்கினார். இதே போல் திருவண்ணாமலையில் 20 தத்தெடுத்த பள்ளிகளுக்காக 32 ஆசிரியர்களின் சம்பளமாக மாதம் 2 லட்சத்து 16 ரூபாயை கொடுத்தார். மாணவர்களின் கல்விக்காகவும், பல்வேறு நலத்திட்டங்களுக்காகவும் இதுவரை 6 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளார். ஜெயகிருஷ்ணனின் சமூக தொண்டுகளை பாராட்ட, அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. உழைத்து சம்பாதியத்தில் 10 சதவீதமேனும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிறார், ஜெயகிருஷ்ணன்.
ஒருவனுக்கு மீன் வழங்குவதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடு என்பார்கள். அந்த செயலைச் சிறப்பாக செய்து வரும் ஜெயகிருஷ்ணன் இச்சமூகத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.