சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா விடுதலை செய்யப்பட்டார். அவரது வருகை தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகலா என்னும் பெயர் தமிழக அரசியலில் மிக முக்கியமானது. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அதிமுக இரண்டாக உடைந்தபோது ஜெயலலிதா தலைமையிலான அணியை வழிநடத்த, வலுவாக்க மிக முக்கியமானவர்களாக இருந்தது இந்த சசிகலா குடும்பம் தான் என்பது அதிமுகவினர் அனைவரும் அறிந்ததே. அத்துடன் ஜெயலலிதா இருந்தவரை அவருக்கு எல்லாமுமாக இருந்தவர் இந்த சசிகலா என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில் 2017 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறை சென்ற சசிகலாவின் தண்டனைக்காலம் நிறைவடைந்துவிட்டது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார். இது பொதுமக்களுக்கு சாதாரண செய்தி. ஆனால் அதிமுகவினருக்கு நிச்சயம் வயிற்றில் புளியை கரைக்கும் ஒரு செய்தி என்றே சொல்லலாம். ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானபோது கட்சி, ஆட்சியை வழிநடத்துவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது.
அப்போது அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்த்து சசிகலாவை கட்சி பொறுப்பை ஏற்கும்படி கூறியக் காட்சிகள் எல்லாம் வெளியாகின. சசிகலா தான் அடுத்த முதலமைச்சர் என்னும் அளவுக்கு அதிமுக-வில் ஒவ்வொரு நகர்வும் இருந்தது. அந்த சமயத்தில் தான் ஓ.பி.எஸ் திடீரென்று தியானத்தில் அமர்ந்து அம்மா சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் அதிமுகாவே உடைந்தது.
அந்த நேரத்தில் இந்த சசிகலா தான் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பலரை ஒன்று சேர்த்து கூவத்தூர் அழைத்துச் சென்று விடுதியில் தங்க வைத்து பெரும்பான்மை பலத்தை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்தார். மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பும் வந்தது. அவர் சிறை செல்ல வேண்டிய சூழல் உருவானது. சிறை செல்லும் முன் அவர் கைக்காட்டிய எடப்பாடி பழனிசாமி தான் தற்போதைய தமிழக முதலமைச்சர். சசிகலா சிறை சென்ற பிறகு எல்லாமே தலைகீழாக மாறிப்போனது.
ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இணைந்து சசிகலாவை கழட்டிவிட்டனர். அதன் பிறகு சசிகலாவின் உறவினரான டி.டி.வி தினகரன் ஒரு புதிய கட்சியைத் தொடங்கி எம்.எல்.ஏ-வும் ஆனார். இப்படி தமிழகத்தில் ஒரு வழியாக அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருக்க 4 ஆண்டு சிறைத்தண்டனை முடிந்து சசிகலா வெளியே வருவார் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது தான் அவருக்கு திடீரென்று கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
சசிகலா வெளியே வந்தால் தமிழக அரசியல் பல மாற்றம் ஏற்படுமோ என்று அவரை வேண்டுமென்றே உள்ளே வைத்திருக்கும் முயற்சியோ என்று கருதப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததன் காரணமாக சசிகலா ஒருவழியாக விடுதலை செய்யப்பட்டார். சசிகலாவுக்கு இன்றும் பல நிர்வாகிகளிடம் செல்வாக்கு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பவர்கள் சசிகலா வந்த பிறகு அவரிடம் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு மீண்டும் அதிமுக-வில் பிளவு ஏற்படலாம். அதனால் தமிழக அரசியல் பல மாற்றங்கள் உருவாகலாம். எனவே சசிகலாவின் வருகையை தமிழக அரசியல் வட்டாரங்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன.