இன்றைய இளம் தலைமுறையினரின் கவனத்தை அதிகம் கவருகின்ற செல்போன் சமூக வலைதளங்கள் என பல்வேறு மாயவலைகள் இருக்கின்றன. இதெல்லாம் நாம் சிக்காமல் மூழ்கி கிடக்காமல் தப்பித்துக் கொள்ள வேண்டுமெனில் ஏதோவொரு விளையாட்டு, நடனம், பாட்டு என எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிகளில் கவனம் செலுத்தினால் நமது வாழ்வு மிகச் சிறப்பாக இருக்கும். இவையெல்லாம் நமது உடலுக்கும் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நூறு சதவீதம் நல்லது என தன்னம்பிக்கையுடன் பேசத் துவங்கினார் 13 வயதேயான சரண்யா தணிகைவேல். வெறும் சொல் அளவில் இல்லாமல் சிறுவயதிலிருந்தே பரதமும் , சிலம்பமும் கற்றுக்கொண்டு பல்வேறு மேடைகளில் ஆடி அசத்தி வருகிறார் சரண்யா தணிகைவேல். நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பல்வேறு திறமைகளோடு கூடிய சாதனைகள் மூலமாக தன்னை நிருபித்து வரும் சரண்யா பரதம் கற்று கொண்டது குறித்தும் சிலம்பம் குறித்தும் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.

உங்களது நாட்டிய ஆர்வம் குறித்து…
நான் மூன்று வயது குழந்தையாக இருக்கும் போதிலிருந்து பரதம் கற்று கொண்டு வருகிறேன். எனது பெற்றோருக்கு பரதநாட்டியத்தில் அதிக விருப்பம் என்பதால் மூன்றரை வயதிலிருந்தே அருகிலிருந்த நாட்டிய பள்ளியில் பயிற்சி வகுப்பிற்கு அனுப்பி வைத்தனர். எனது முதல் குரு திருவள்ளுவர் தேவயானி அவர்கள். நடுத்தர குடும்பத்தில் பிறந்த எனக்கு கலை குறித்த பின்னணிகள் ஏதும் கிடையாது. எனது அப்பாவின் ஆர்வம் காரணமாக தான் நாட்டியம் கற்க துவங்கினேன். சென்னையை அடுத்த திருநின்றவூரில் தான் நாங்கள் வசித்து வருகிறோம். அங்குள்ள ஜெயா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறேன். தற்போது பத்து வருடங்களாக நாட்டியம் கற்றுக்கொண்டு பல்வேறு மேடைகளில் ஆடியும் வருகிறேன். சிறுவயதிலிருந்தே பல்வேறு விழா மேடைகளில் ஆடிய அனுபவங்கள் நிறையவே இருக்கிறது. கோவில் திருவிழாக்களில், ஏனைய மேடைகளில் பரதம் ஆடுவது எனக்கு பிடித்தமான ஒன்று. பரதக்கலை நமது தொன்மை வாய்ந்த பாரம்பரிய கலை. அதனை முறையாக கற்று கொண்டு ஆடுவது மனமகிழ்வான விஷயம்.

இதற்கென நிறைய விருதுகள் மற்றும் பாராட்டுதல்கள் கிடைத்தது. பாலநாட்டிய சிரோன்மணி, நாட்டிய சுடர் மணி, நாட்டியகலைமாமணி, நாட்டிய நந்தகி, நித்ய பூர்வ நிரஞ்சனா என்கிற பட்டங்கள் கிடைத்தது எனது நாட்டிய ஆர்வத்திற்கு கிடைத்த கௌரவங்கள். சமீபத்தில் கொற்றவை விருது பெற்றதும் மகிழ்வான ஒன்று. அந்த விழா மேடையில் சிறப்பு விருந்தினர்கள் முன்பு நடனம் ஆடியது ரொம்பவும் ஸ்பெஷலான ஒன்று.
சிலம்பம் விளையாட்டில் ஏற்பட்ட ஆர்வம் குறித்து…
நான்கு வயது முதல் சிலம்பம் கற்று வருகிறேன். எனது குரு திருவொற்றியூர் கதிர் அவர்கள். நான் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் மற்றும் தேசிய போட்டிகளிலும் பங்கு பெற்று நிறைய மெடல்களை பெற்றுள்ளேன். அதே போன்று சிலம்பத்தில் இரண்டு உலக சாதனைகளை படைத்துள்ளேன். அதில் 4 மணிநேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்கால லட்சியங்கள் குறித்து?
நான் நிறைய போட்டிகளில் பங்கேற்கவும், நடனத்தில் பல சாதனை படைக்கவும், எனது சிலம்பம் விளையாட்டு மற்றும் நடன திறன்களை மெருமேற்றவும் எனது அம்மாவும், அப்பாவும் எனது குடும்பமும் தான் பக்க பலமா இருக்கிறார்கள். அவர்களுக்கும் எனக்கு கலைகளை கற்பித்த குருவிற்கும் நிறைய பெருமைகளை தேடி தரவேண்டும் என்கிற ஆசைகளோடு கூடிய சிறப்பான நம்பிக்கைகள் இருக்கிறது. அதற்காக நான் பயணிக்க வேண்டிய தூரங்களும் நிறைய இருக்கிறது. நான் எனது கல்வியையும் திறம்பட கற்று வருகிறேன்.
அம்மா சந்தியாவும் அப்பா தணிகைவேல் அவர்களும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் சமூக சேவகர்கள். அதனை பார்த்தே வளர்ந்த எனக்கும் சமூக சேவைகள் செய்வதில் ஆர்வமிருப்பதில் ஆச்சரியங்கள் ஏதுமில்லை. எனக்கு
சட்டம் பயின்று ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே பெரும் ஆசை. படித்து முடித்ததும் சொந்தமாக நடன பயிற்சி பள்ளி வைக்க வேண்டும். அதே போல் சிலம்பம் பயிற்சி பள்ளியும் எனது ஆசைகளில் ஒன்று தான். பரதமும் சிலம்பமும் நமது பாரம்பரிய கலைகள். இக்கலைகளை சிரத்தையுடன் கற்றுக்கொண்டு இலவசமாக அதனை மற்றவர்களுக்கும் கற்று தரவேண்டும் என்கிற பெரும் ஆசைகளும் எனக்கு இருக்கிறது என தன்னம்பிக்கை மிளிர பேசுகிறார் சரண்யா தணிகைவேல்.




