மாநிலங்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் திமுக சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வழக்கறிஞர் வில்சன், தொமுச சண்முகம், முகமது அப்துல்லா ஆகியோரும், அதிமுக சார்பில் பாமக (செயல்) தலைவர் அன்புமணி ராமதாஸ், சந்திரசேகர் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24ந் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டிலிருந்து அடுத்த ஆறு எம்.பி.,க்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் மாதம் 9 ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசித் தேதி ஜூன் 19 ஆகும். 19 ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திமுகவைப் பொறுத்தவரை, நான்கு பேரில் 3 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைகோ, வில்சன் ஆகியோருக்கான எம்.பி பதவிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. முகமது அப்துல்லாவுக்கே வாய்ப்பு வழங்கப்படலாம் அல்லது சிறுபான்மை அமைப்புகளில் இருந்து வேறு ஒருவருக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலின் போது செய்து கொண்ட கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு எம்.பி., சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவைப் பொறுத்தவரை, அன்புமணி ராமதாசுக்கு சிக்கல் எழுந்துள்ளது. அதிமுக கூட்டணி மூலம் தற்போதைய எம்.பி பதவி பெறப்பட்டது. ஆனால் தற்போது பாமகவில் எழுந்துள்ள உள்கட்சி விவகாரங்கள் காரணமாக அதிமுக, பாஜக கூட்டணியில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்கிற குழப்பம் நீடித்து வருகிறது. தேர்தலுக்கான நாட்கள் குறைவாக உள்ள நிலையில் பாமகவிற்கான எம்.பி சீட் உறுதி செய்யப்படாமலே இருக்கிறது. அதிமுகவின் சந்திரசேகருக்குப் பதில் இம்முறை வேறு ஒருவருக்கு சீட் வழங்க உள்ளதாக தலைமை முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கு முன் கூட்டணி உறுதி செய்யப்படாமல் விட்டு விட்டால் இரண்டு தொகுதிகளையும் அதிமுகவே நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு சீட் வழங்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. சில தேர்தல்கள் கூட்டணியை உறுதி செய்ய வருகின்றன. சில தேர்தல்கள் கூட்டணியைப் பிரிக்க வருகின்றன. இந்த இரண்டு தொகுதி அதிமுக, பாஜகவா அல்லது அதிமுகவேவா என்பது அடுத்த மாதம் முதல் வாரத்தில் தெரிந்து விடும்.





