சினிமா, அரசியலில் திமுக, பின்னர் காங்கிரஸ் அனைத்திலும் இருந்தபோதும் அடுத்தவர்களால் கவனிக்கப்படும் அளவுக்கு ஏதோ ஒரு வகையில் பரபரப்பாக இருந்துள்ளார் குஷ்பு. நடிகைக்கு கோயில் கட்டப்பட்டதென்றால் அது குஷ்புவுக்குத்தான் இருக்கும்.
சினிமா உலகில் நடிக்க வரும் நடிகைகள் அறிவற்றவர்களாக இருப்பார்கள், சமூக பார்வை இருக்காது என்கிற ஆணாதிக்க கருத்தை உடைத்த பல நடிகைகளை தமிழ் திரையுலகம் கண்டுள்ளது. சௌகார் ஜானகி, பானுமதி தொடங்கி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வரை பலர் அறிவார்ந்த, ஆளுமை மிக்கவர்களாக இருந்ததைப் பட்டியலிடலாம்.
அவர்களது திறமை, அறிவாற்றலால் இன்றும் பேசப்படுகிறார்கள். கல்வி 10-ம் வகுப்பு என்றாலும் கல்லூரிக்கு போகவில்லை என்றாலும் சிவில் சர்வீஸ் எழுதியவர்கள் அளவுக்கு வெளியே தேடி தேடி படித்தவர் ஜெயலலிதா. அது அவருக்கு ஆட்சியில் பயணிக்க உதவியது. அதே வரிசையில் மிக திறமையான நடிகை, புத்திசாலித்தனமானவர் குஷ்பு.
இதை எழுதக்காரணம் பெண்களைப்பற்றிய ஆணாதிக்கப்பார்வையில், சினிமா நடிகைகள் என்றாலே கேவலமாக நினைக்கும் சிந்தனையில் இதற்கு பின் வரும் விமர்சனங்கள் அணுகப்படுகிறது என்ற எண்ணம் யாருக்காவது இருந்தால் அதை விட்டு விடுங்கள் என்பதற்காகவே.
குஷ்பு ஒரு ஆணாக இருந்து குஷ்பணாக இருந்தாலும் இதே விமர்சனம் வைக்கப்படும். மேட்டர் ஒன்றுதான் சினிமா பிரபலத்தை வைத்து அரசியலை அணுகலாமா? என்பதே. இது விமர்சன ரீதியான கட்டுரை அதைத்தாண்டி செல்ல வேண்டாம் என்பதற்காகவே.
இப்ப முதல் வரிக்கு வரலாம் சினிமா, அரசியல் அனைத்திலும் தன்னை கவனிக்க வைத்தவர் குஷ்பு. திடீரென திமுகவுக்குள் நுழைகிறார். திமுக, அதிமுகவுக்குள் சில சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் இயங்குவார்கள். என்னதான் பல சீர்த்திருத்தங்கள் பேசினாலும் ஒரு அடிமைத்தனம் இழையோடும். குஷ்பு அதை மீறினார். தலைமையிடம் வேகமாக நெருங்கினார். அது அவருக்கு பிரச்சினை ஆனது.
கட்சியின் அடுத்த தலைமைக்கு யார் வரலாம் என்பது குறித்து கருத்து தெரிவித்தார். பொதுவாக குஷ்பு கட்சி அரசியலுக்கு சரிபட்டு இயங்க முடியாதவர் என்கிற கருத்து உண்டு. கட்சிக்குள் பேசவேண்டிய விஷயங்களை பொதுவெளியில் பேச எந்தக்கட்சியும் அனுமதிக்காது. ஆனால் அவர் இதற்கு முன் இருந்த இரண்டுக்கட்சியிலும் அதை தாராளமாக செய்தார். தற்போது சென்றுள்ள கட்சியிலும் செய்வார் ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது.
பிரச்சினைக்கு வருவோம். நடிகைகள் அவர்கள் அரசியல் அறிவு, சமூக அக்கறை குறித்தெல்லாம் கவலைப்படாமல் பொதுமக்களை கவர தங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டு பிரச்சாரத்துக்கு அனுப்பி அவர்களை பேச வைத்து ஓட்டுவாங்குவது (இதுவரை அதனால் ஓட்டு விழுந்ததாக தெரியவில்லை) இடதுசாரிகள் தவிர அனைத்துக்கட்சிகளிலும் உள்ள போக்கு ஆகும்.
திடீரென கட்சிக்குள் நுழையும் அவர்கள் அக்கட்சியின் கொள்கைகள் (இருக்கிறதா என்று கேட்காதீர்கள்) நடைமுறை அரசியல், மக்கள் பிரச்சினை, கட்சியின் முந்தைய வரலாறு எதையாவது கொஞ்சம் படிக்கவேண்டும் என்ற எண்ணம் சேர்க்கிறவர்களுக்கும் இருக்காது, சேருபவருக்கும் இருக்காது.
கூட்டம் சேர்க்க அவர் பயன்படுவார் என்கிற எண்ணத்தில் சேர்ப்பது, மிகப்பெரிய பதவிகள் அனைத்தும் வழங்குவது பின்னர் அவர் வெளியேறினால் கே.எஸ்.அழகிரி சொன்னது போல் ஒரு நடிகையாகத்தான் அவரை பார்த்தார்கள் என்பது. இது வாடிக்கையான ஒன்று.
சப்ஜக்டுக்கு வருவோம். திமுகவிலிருந்து வெளியேறிய குஷ்பு அதன் பின் திமுகவை விமர்சிக்கவே இல்லை. இனி விமர்சிப்பாரா தெரியாது, விமர்சிக்கலாம். இனி அவருக்கு கொடுக்கப்போகும் அசைன்மெண்டே அதுவாகக்கூட இருக்கலாம். காங்கிரஸ் கட்சியில் குஷ்பு இணைந்த சில ஆண்டுகளில் கட்சியின் மிகப்பெரிய பொறுப்பான அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்படுகிறது.
இன்று நடிகையாக பார்க்கிறோம் என்று விமர்சிப்பவர்கள், அன்று அவர்களது கட்சியின் தலைமை அவரை நடிகையாகப் பார்க்கவில்லை அதனால் தான் மிகப்பெரிய பொறுப்பை அவருக்கு வழங்கினார்கள் என்பதை மறந்துவிட்டார்கள். குஷ்பு அதற்கு தகுதியானவரா என்று கேட்டால் குஷ்புவே இன்றைய, நேற்றைய பேட்டிகளில் அதற்கு நான் தகுதி இல்லாதவர் என சொல்லிவிட்டார். அந்தப்பிரச்சினைக்கு அப்புறம் வருவோம். அவர் தப்பிப்பதற்காக சொன்ன கதை அது.
ஆனால் குஷ்பு அதற்கு தகுதியானவரா எனக்கேட்டால் குஷ்பு என்ன சொல்வார், எனக்கு பல மொழிகள் தெரியும், சமகால அரசியல் தெரியும், பல அரசியல்வாதிகள் பழக்கம், ட்விட்டர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறேன் என்றெல்லாம் தனது அறிவாற்றலுக்காக காரணங்களை அடுக்கலாம்.மொழிகள் அறிந்திருப்பது அறிவு அல்ல அது தொடர்புக்கான ஒரு பாலம் என பலரும் சொல்லி இருக்கிறார்கள் நாமும் சொல்வோம்.
அடுத்து பல அரசியல்வாதிகளைத்தெரியும் என்பது, சினிமா பிரபலம், அரசியலில் 10 ஆண்டுகள் இருந்துவிட்டார் அதனால் தெரியாமல் இருக்காது. ஆனால் இது அரசியலுக்கு உதவாது. என்னங்க இதுதான் பலருக்கு தகுதி என்றால் இருக்கலாம், இதைத்தாண்டிய தகுதி உள்ளவர்கள் தான் ஆளுமைமிக்க அரசியல்வாதிகளாக இருந்துள்ளார்கள். இருக்கிறார்கள்.
அடுத்து ட்விட்டர், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது. இதுதான் இன்றைக்கு அனைவரும் செய்யும் செயலாச்சே. இதில் அரசியலைத்தாண்டி பலர் மிகுந்த ஆக்டிவாக பல சமூக விஷயங்களை அலசுகிறார்கள். குஷ்பு ட்விட்டர் உள்ளிட்ட மற்ற வலைதளங்களை காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக தான் இருப்பதை உறுதிப்படுத்த பல பதிவுகளை, அவ்வப்போது வரும் நிகழ்வுகளை பதிவிட்டார், ரீட்வீட் செய்தார்.
இதைத்தான் சமகால அரசியல் என்கிறேன். ஒரு நூற்றாண்டுக்கண்ட கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளருக்கு இது மட்டும் போதுமா என்றால் போதாது. கட்சியின் நீண்ட வரலாறு, நேரு முதல் தற்போதைய ராகுல், சச்சின் பைலட் வரை மாறிய காங்கிரஸ் அரசியல், இந்திய அரசியல், தேசிய அரசியலில் மாநிலங்களின் தனித்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை, இந்தியாவில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், மொழி, சமூகம், மதம், இட ஒதுக்கீடு, பொருளாதாரம், கார்பரேட் அரசியல் முதல் காவி அரசியல் வரை உள்ள பிரச்சினை தெரிந்திருக்கவேண்டும் அல்லவா?
தெரியாதுன்னு சொல்ல வருகிறீர்களா? நீங்கள் எப்படி அப்படிச் சொல்லலாம் என்ற கேள்வி நியாயமாக எழலாம். அதற்குத்தான் குஷ்புவே சொல்லி இருக்கிறார் என்றேன். அது தவிர வேறு சில விஷயங்களிலும் அவரது அரசியல் பார்வையின் தடுமாற்றமும் அவருக்கு உள்ள அரசியல் தெளிவு சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதை தெளிவுப்படுத்தியது.
குஷ்புவே பதில் சொல்லி இருக்கிறார் என்கிறீர்களே எப்படி என்று கேட்கலாம். நமது பத்திரிகையாளர்கள் மீது குஷ்புவுக்கு அவ்வளவு நம்பிக்கை. காரணம் கேள்விகள் கூர்மையாக வரவில்லை என்பதால் டெல்லியில் தடுமாறி சொன்னவர் கமலாலயத்தில் அழுத்தமாக சொன்னார். என்ன சொன்னார் அதைச் சொல்லுங்கள் என்கிறீர்களா வருகிறேன் அதற்கு முன் சின்ன விளக்கம்.
கொஞ்சம் 7 வது பாராவை படித்துவிட்டு வந்துவிடுங்கள், படித்தீர்களா? அங்கத்தாங்க பிரச்சினையே ஆரம்பிக்குது. குஷ்புவும் அதற்கு விதிவிலக்கா என்ன? போனவாரம் பாஜகவை திட்டினீர்கள், காங்கிரஸில் இருக்கும்போது பாஜகவை கடுமையாக எதிர்த்தீர்கள் இப்போது அந்தக்கொள்கைகள் என்ன ஆச்சு என்று செய்தியாளர்கள் கேட்டார்கள். நம்ம செய்தியாளர்கள் கேள்வி மட்டும் கேட்பார்கள் அதற்கு அவர்கள் வினோதமான, கற்பனைக்கெட்டாத பதில் அளித்தால்கூட அதில் குறுக்கு கேள்வி எழுப்பாமல் அடுத்த கேள்விக்கு சென்று விடுவார்கள்.
இது குஷ்பு போன்றவர்களுக்கு, இன்றைய அமைச்சர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு நல்ல வசதியாக போய்விட்டது. நேற்றும் அது நடந்தது, இப்ப கேள்விக்கு வருவோம் இந்தக்கேள்வியை குஷ்புவிடம் கேட்டபோது திடுக்கிட்டுப்போன அவர் லேசாக தயங்கி ஒரு விளக்கத்தைக் கொடுத்தார். என்ன விளக்கம் அது, காங்கிரஸில் இருக்கும்போது நான் எதிர்க்கட்சி அதனால் ஆளுங்கட்சியை விமர்சிக்கும் நிர்பந்தம் அதனால் அப்படி பேசினேன் என்றார்.
உடனடியாக நமது செய்தியாளர்கள் அடுத்த கேள்விக்கு போயாச்சு. இது எவ்வளவுப்பெரிய நழுவல், இதை சாதாரண கொடிக்கட்டும் தொண்டன் கூட சொல்ல மாட்டான். இவர் ஒரு கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளர், 6 ஆண்டுகள் அக்கட்சியில் இருந்துள்ளார். நடிகையாகத்தான் பார்த்தார்கள் என்று சொல்லும்போது கோபப்படுகிறார், ஆனால் இவர் அக்கட்சியின் அரசியல்வாதியாக இருந்ததால் நிர்பந்தத்தால் பேசினேன் என்று எப்படிச் சொல்ல முடியும்.
கட்சியின் செய்தித் தொடர்பாளர் அவர், கட்சியின் அன்றாட செயல்பாடுகள், அவ்வப்போது வரும் அரசியல் மாற்றங்களை ஒட்டி கட்சி எடுக்கும் நிலைப்பாடுகள், கட்சி கொள்கை அனைத்தையும் தினந்தோறும் அணுகும் நபராகத்தானே இருக்க முடியும். அப்படி இருப்பவர் இப்படிப்பட்ட வார்த்தையை சொல்ல முடியுமா?
ஒரு வாதத்துக்கு அவர் சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம் என்று வைத்துக் கொண்டால் அவர் தற்போது பாஜகவில் இணைந்து காங்கிரஸை விமர்சிப்பதையும் அப்படித்தானே பார்க்க முடியும். தற்போது காங்கிரஸை நீங்கள் விமர்சிப்பது பாஜகவில் இணைந்ததால் வந்த நிர்பந்தமா? என எந்த செய்தியாளரும் கேட்கவில்லை. பாவம் பாஜக தலைவர் முருகன் மனதுக்குள் இந்த கேள்வி எழுந்திருக்கும்.
அடுத்து கமலாலயத்தில் அதே கருத்தை மீண்டும் மீண்டும் அழுத்தி பேசினார் குஷ்பு. ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு செல்பவர் இப்படி ஒரு வினோத விளக்கத்தை கொடுப்பதை இதுவரை பார்த்ததில்லை. அவரது விளக்கத்தை அடுத்த வரியிலேயே அவர் மீறுகிறார். எதிர்க்கட்சிகள் அரசை விமர்சிக்கலாம், ஆனால் மாற்று சொல்யூஷன் சொல்லணும் என்கிறார். இவர் விமர்சித்த காலங்களில் சொன்னாரா என்பது குறித்து யாரும் கேட்கவில்லை.
ஆனால் எதிர்க்கட்சிகள் அறிக்கைகள், சமூக ஆர்வலர்கள், பொருளாதார நிபுணர்கள், விவசாய சங்கங்கள், கல்வியாளர்கள் ஒரு விஷயத்தை எதிர்க்கும்போது அது எப்படி மக்களை பாதிக்கிறது, அதற்கு மாற்று என்ன என்பதை சொல்லாமல் இல்லை. இதற்குத்தான் முன்னரே சொன்னேன். மொழிகள் அறிந்திருப்பதோ, எல்லோரையும் தெரிந்திருப்பதோ, சமூக வலைதளங்களில் சூடாக ட்வீட் போடுவதோ அரசியல் அறிவு அல்ல.
இதை ஏன் குஷ்புக்கு மட்டும் சொல்கிறீர்கள் என கேட்கலாம், அவர்தான் இந்த விவாதங்களை ஆரம்பித்து வைத்துள்ளார். பலரும் முக்கியமான கேள்விகள் எதையும் கேட்காமல் உங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன மேடம்?, கன்னியாகுமரியில் போட்டியா?, சுந்தர் சி தான் காரணம் என்கிறார்களே? என்கிற உளுத்துப்போன கேள்விகளை கேட்க, அதை எதிர்க்கொண்ட அவர் அறிவார்ந்த விதமாக தம்பி எத்தனை வருஷம் நீ ரிப்போர்ட்டராக இருக்க? என்று இளம் செய்தியாளரை கேள்வி கேட்டு மடக்கி பதில் சொல்லும்போது சாதாரணமாக மக்கள் மனதில் என்னப்பா இதை கேட்காமல் விடுகிறார்களே என்ற எண்ணம் எழும்.
இதுபோன்ற நிலை மற்ற அரசியல் கட்சித்தலைவர்கள், அமைச்சர்களிடம் பேட்டிகளிலும் இதே நிலை தொடரும்போதுதான் குஷ்பு இன்றைய பரபரப்பு என்பதால் குஷ்புவை வைத்து இந்த பதிவு.
இருங்க இன்னும் முடிக்கவில்லை. இப்படி நிர்பந்தம் என பேட்டி அளித்த குஷ்பு நிர்பந்தம் இல்லாமல் சில காரியங்களும் செய்துள்ளார் தெரியுமா?. அது அவரது அறிவுத்திறனை காட்டும். அது என்னன்னா? புதிய கல்விக்கொள்கையை நாடே அதை எதிர்க்கிறது. இளம் தலைமுறை இதனால் எப்படி பாதிக்கப்படுவார்கள் எனக் காரணம் கூறி எதிர்க்கிறார்கள், ஆனால் அதை கடுமியாக எதிர்க்கும் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்துக்கொண்டே குஷ்பு இதை ஆதரித்தார்.
இது எந்தவகை நிர்பந்தத்தால்? முத்தலாக் விவகாரத்தை மத்திய அரசு கையிலெடுத்தபோது அவர் அகில இந்திய செய்தித் தொடர்பாளராக இருந்த காங்கிரஸ் முதல் அனைத்து கட்சிகளும் எதிர்த்தன, குஷ்பு என்ன செய்தார் தெரியுமா? அதை ஆதரித்தார். நியாயப்படி இவர் சொல்லும் நிர்பந்தத்தால் அதை மனது ஒப்பாவிட்டாலும் எதிர்த்திருக்கணும் அல்லவா? அல்லது சும்மா இருக்கணும் அல்லவா? ஏன் ஆதரித்தார்?
அடுத்து பொது சிவில் சட்டம் முன்னரே சொன்னதுபோன்று பொது சிவில் சட்டத்துக்கும், ஜனசங்கம் தொடங்கி பாஜக வரை நீண்ட நெடிய வரலாறு உண்டு. அதை காங்கிரஸ் கட்சிக்குள் இருந்துக்கொண்டே குஷ்பு ஆதரித்து பேட்டி அளித்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
கட்சித்தலைமையை விமர்சிப்பது இவரது இன்னொரு வகை பார்முலா. திமுகவில் ஸ்டாலின் தான் தலைவர் என்று சொல்ல முடியாது என்றார். அதைச் சொல்ல அவருக்கு உரிமை உண்டு, ஆனால் அதை அவர் திமுகவுக்குள் இருந்து சொன்னது சரியல்ல அல்லவா?
இதேப்போன்று காங்கிரஸுக்குள் தலைமை பிரச்சினை வந்தபோது சச்சின் பைலட்டை கொண்டு வரலாம் என்று பதிவிட்டது அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பதவியில் உள்ளவருக்கு தகுதியான செயல் அல்ல. இதற்கு சரியான உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் பாஜகவுக்கு சென்றுள்ள அவர் அகில இந்திய அளவில் கட்சிக்குள் ஏதாவது பிரச்சினை வரும்போது நான் ட்விட்டர் பிரபலம் என்று இவர் எதையாவது பதிவிட்டால் சரியாக இருக்குமா? எந்தக்கட்சியும் இதை அனுமதிக்காது.
காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது பாஜகவை விமர்சிக்க நிர்பந்தம் என்று தன் நிலையை நியாயப்படுத்தும் குஷ்பு காங்கிரஸ் எதிர்க்கும் எதிர்க்கட்சியின் முக்கிய கொள்கைகளை ஆதரித்தது சரி என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாஜக தலைவர்களும் அதை அனுமதிக்க மாட்டர்கள். பாஜகவுக்குள் இருந்தாலும் நான் பெரியாரிஸ்ட் என்கிறார் குஷ்பு.
இது அடுத்த சறுக்கல், குஷ்பு போன்றவர்கள் பாஜகவுக்கு பொருத்தமாக மாட்டார்கள் காரணம் காங்கிரஸ் போன்று அங்கு வேடிக்கை பார்க்க மாட்டார்கள், குஷ்புவின் குணத்துக்கும் அது ஒத்துவராது என்று ஒரு பெரிய பத்திரிகையாளர் எழுதினார். அது முற்றிலும் உண்மை.
வெளிப்படையாக பேசும் குஷ்பு நான் பெரியாரிஸ்ட் என்பதும், தமிழகத்துக்கு பாஜக எதுவுமே செய்யவில்லை என டெல்லி செய்தியாளர்கள் பல விஷயங்களை அடுக்கி எப்படி இணைகிறீர்கள் என்று கேட்கும்போது இப்பத்தானே வந்திருக்கிறேன் என்று சொல்லி உடனிருந்த பாஜக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
பெரியார் பற்றி திமுக பேசக்கூடாது, அவர் அரசியல்வாதி அல்ல அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிப்போனார் என்று பெரியாரிஸ்ட் குஷ்பு இன்னொரு குண்டைத் தூக்கிப்போட்டார். பாவம் எல்லோரும் 90 கே கிட்ஸ், 2000 கிட்ஸ் செய்தியாளர்கள் என்பதால் யாரும் அவரிடம் எதிர்க் கேள்விக் கேட்கவில்லை. பெரியாரின் தலைமையிலான திகவிலிருந்து 1949-ல் திமுக உருவாகி தேர்தல் அரசியல் கண்டது. திக சமூக இயக்கம். சமூக பிரச்சினை இல்லாமல் அரசியல் உண்டா?
பெரியார் காமராஜரை 1954 முதல் ஆதரித்தார். அது 1967 வரை தொடர்ந்தது. பச்சைத்தமிழனை ஆட்சியில் அமர்த்துங்கள் என பிரச்சாரம் செய்துள்ளார். அதன் பின்னரும் திமுகவுக்கு ஆதரவாக அவர் எழுதியுள்ளார். பேசியுள்ளார், சமூக நீதிக்காக கடைசிக்காலம் வரை பேசியுள்ளார். அதெல்லாம் அரசியல் அல்லாமல் வேறு என்ன?
தன்னை பெரியாரிஸ்ட் என்று பாஜக மேடையில் பகீரங்கமாக அறிவித்த குஷ்பு கொஞ்சம் பெரியாரைப் படித்திருந்தால் பாஜக பக்கம் போயிருக்க மாட்டார். பெரியார் காலமெல்லாம் எந்த வர்ணாசிரம கொள்கையை எதிர்த்தாரோ, எந்த அடிப்படையில் கைவைத்தாரோ அதை ஆதரிக்கும் இயக்கம் பாஜக.
பாஜக தீண்டத்தகாத கட்சி என்று சொல்லவில்லை. அதற்கு ஒரு கொள்கை உண்டு, அதனை ஏற்றுக்கொள்கிறவர்கள் இணைகிறார்கள். குஷ்புக்கு அங்கு போக உரிமையில்லை என்றும் சொல்ல முடியாது. ஏதோ ஆதாயம் போய்விட்டார், அதற்கு ஏன் பெரியாரை பற்றியும் அவர் அரசியலில் இல்லை என்றும் தவறான வரலாற்றை பதிவு செய்வது சரியல்ல.
இப்போது முதல் பாராவை படிக்கலாம். திரைப்பிரபலங்கள் அரசியலுக்கு வருவது தப்பல்ல. வெறும் கூட்டம் சேர்க்கும் தனது சினிமா பிரபலத்தை நம்பாமல் கொஞ்சம் அரசியல் அறிவையும் வளர்த்துக் கொண்டால் மிகச்சிறந்த தலைவராகலாம். இல்லாவிட்டாலும் தலைவராக இருக்கலாம்…. ருக்கலாம்…கலாம்….லாம்…ம்.
-கிராம்சி