ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்தியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் 4 கோடியே 58 லட்சம் பெண்கள் காணவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்துள்ளது. மேலும் 2050ம் ஆண்டில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் 7 கோடியே 23 லட்சம் பெண்கள் மாயமாகி உள்ளதும் தெரிய வந்துள்ளது. 2013 முதல் 2017 வரையிலான கணக்கின்படி இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 4,60,000 பெண் குழந்தைகளைக் காணவில்லை. இதில் சுமார் 3,00,000 குழந்தைகள் பெண்ணாகப் பிறந்ததற்காகவே காணாமல்போயிருக்கிறார்கள் என்கிறது அறிக்கை. உலகளவில் மாயமான 21 சதவீத பெண்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று அறிக்கை சுட்டி காட்டுகிறது. இது 2015-16 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 26.8 சதவீதமாக இருந்தது.
ஆண் – பெண் விகிதாச்சாரம்
ஆயிரம் பெண் குழந்தைகளில் 13 குழந்தைகளுக்கு மேல் இறந்துபோவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் புள்ளிவிவரத்தின்படி உலக அளவில் பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்தியாவில்தான் அதிகம். ஆண் குழந்தைகளுக்கான தேர்வு என்பதே இதற்கும் அடிப்படை. அதாவது, ஐந்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளில் இறந்துபோகும் ஒன்பது குழந்தைகளில் ஒரு குழந்தை இறப்பிற்குப் பாலினமே காரணம் எனச் சுட்டிக்காட்டுகிறது அறிக்கை.
2011-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 943 பெண்கள்தான் உள்ளனர். கடந்த கால புள்ளிவிவரங்களைக் கொண்டு 2020-ல் இந்தியாவில் ஆண் – பெண் எண்ணிக்கையில் சமமின்மை மேலும் அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை முன்பே தெரிவித்திருந்தது. இந்த ஆண்டு இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 924 பெண்கள்தான் இருப்பார்கள் என்கிறது ஐ.நா.வின் அறிக்கை.
201 நாடுகளின் பட்டியலில் ஆண் – பெண் விகிதாச்சாரத்தில் உள்ள சமமின்மையில் இந்தியா 189-ம் இடத்தில் உள்ளது. ஆசியாவில் உள்ள 51 நாடுகளில் இந்தியா 43-ம் இடத்தில் உள்ளது. பாலினத் தேர்வின் அடிப்படையில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதே ஆண் – பெண் விகிதாச்சாரத்தில் ஏற்படும் சமமின்மைக்கான முக்கியக் காரணம். இதுவே பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைகிறது.
“என்றைக்கு ஒரு பெண், நகைகள் அணிந்து கொண்டு தன்னந்தனியாக நள்ளிரவில், யார் துணையுமின்றி வெளியில் போக முடிகிறதோ அன்று தான் இந்தியா உண்மையான சுதந்திரம் அடைந்ததாகப் பொருள்” என்றார், காந்தி. ஆனால் அந்த கருத்தே ஆணாதிக்க சிந்தனையில் இருந்து வெளிவரும் கருத்தாக பார்க்கப்படுகிறது. அதே போல் காந்தி குறிப்பிட்டது போல், நகைகளைக் கவரும் கொள்ளையர்களைப் பற்றி இன்று பயப்படுவதை விட அதை அணிந்து வெளியில் செல்லும் பெண்களை பற்றி தான் அதிக கவலையே.
இதைவிடக் கொடுமை, பெற்றோரை இழந்து பாதுகாப்பும், அன்பும் கிடைக்கும் என நம்பி காப்பகங்களில் வாழும் இளந்தளிர்கள், பெண் பொறுப்பாளர்களின் ஒத்துழைப்போடு பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருப்பது தான். அரசு நடத்தும் காப்பகங்களிலேயே இந்த நிலை என்றால், தனியார் நடத்தும் காப்பகங்களின் நிலை என்னவோ?
ஆயிரம் சட்டங்களும், அவற்றை நடைமுறைப்படுத்த நீதிமன்றங்களும் இருந்தும் உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் அரசு உதவி பெறும் காப்பகங்களே பால் மனம் மாறாத சிறுமிகளையும், புகலிடம் தேடி வந்த பெண்களையும் காம வெறி பிடித்தக் கயவர்களுக்கு இரையாக அனுப்பி இருக்கின்றன. இதற்கு ஒரு மருத்துவமனையும், அதில் இருந்த மருத்துவர்களும், செவிலியர்களுமே உடந்தை. ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் ஹார்மோன் ஊசி போட்ட காலம் போய், இப்போது சின்ன சிறு மொட்டுகளுக்கும் ஹார்மோன் ஊசி போட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்.
இக்கொடுமை பல காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது அரசுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ, காவல் துறைக்கோ தெரியவில்லையா அல்லது தெரிந்தும் ஆதரவற்ற பெண்கள் தானே என்ற மெத்தனமா? தாய்நாடு என்கிறோம், பாரத மாதா என்கிறோம். அந்தத் தாயின் வடிவங்களான சிறுமிகளின் அவலநிலையைப் பற்றி அறிந்த பின்னரும் நாம் உண்மையில் சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று எண்ணினால் நாம் அனைவரும் அறிவிலிகள் மட்டுமல்ல, நெஞ்சில் ஈரமே இல்லாத அரக்கர்களாவோம்.
உன்னாவ், கதுவா கொடுஞ்செயல்களிலிருந்து மீண்டு வருமுன் முசாபர் நகர், பாட்னா சம்பவங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றன. பொள்ளாச்சியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் காப்பகம் ஒன்றில் நடந்த வன்கொடுமைகளை நாம் மறந்துவிட்டோம். பெண்களுக்கு எதிரான இந்த வன்கொடுமைகளுக்கு என்ன காரணம்? என்ன தீர்வு? நம் சமுதாயத்தில் ஆண்கள், பெண்களை விட ஒரு படி மேலே என்ற எண்ணம் வேரூன்றிப் போயிருக்கிறது. கல்வி, பணம், அந்தஸ்து எதுவுமே ஆண் – பெண் சமத்துவத்துக்கு அடிகோலவில்லை. பெண்களுக்கு உரிமையும் இல்லை, பாதுகாப்பும் இல்லை. இதற்கு முக்கிய காரணம் சில ஆண்கள் பெண்களை ஒரு போகப் பொருளாகத் தான் கருதுகிறார்கள். திரைப்படங்களும் , ஊடகங்களும் இந்தப் போக்கை ஊக்குவிக்கின்றன.
ஒரு பெண்ணைப் பின் தொடர்தல், சீண்டுதல், தொடுதல், கேலி செய்தல் போன்றவையெல்லாம் தண்டனைக்குரிய குற்றங்கள் என்று சட்டம் இருந்தும் திரைப்படங்கள் காலங்காலமாக இப்படித் தான் ஆண் – பெண்ணைச் சித்தரிக்கின்றன. இது தடுக்கப்பட வேண்டிய குற்றமல்லவா? இப்படி நடிக்க மாட்டோம் என நடிகர்கள் மறுக்கலாம் அல்லவா?
பெண் பாதுகாப்பு தொடர்பாக, பெண்களுக்கு மட்டுமே விழிப்புணர்வு கொடுக்கப்படுகிறது. பாலியல் குற்றங்கள் மட்டுமே பெண்கள் மீது நடத்தப்படும் வன்மம் என்று நாம் பார்த்திட முடியாது. ஒரு பெண் தன் தாயின் வயிற்றில் இருந்து வெளிவருவது முதல் சுடுகாட்டிற்கு செல்லும் வரை அவள் எல்லா நிலையிலுமான அநீதிகளையும் சந்திக்கிறாள். குழந்தை கருக்கலைப்பு, பெண் குழந்தை பிறந்தால் அதை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்வது, சிறுமிகளை கடத்துவது, உறவினர்களே சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவது, பள்ளிகளில் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் பாலியல் ரீதியாக தாக்கப்படுவது, காதல் பிரச்னைகளில் பெண் மட்டுமே பாதிக்கப்படுவது, திருமணம் ஆன பிறகு கணவன், மாமியார் மூலம் கொடுமைகள், வரதட்சணை கொடுமை, சாதிய ஆணவ கொலைகள், பெண்கள் கடத்தப்படுவது என்ற பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த சுதந்திர சமூகத்தில் பெண்கள் வாழவேண்டிய கட்டாயம் உள்ளன.
கடந்த 50 ஆண்டுகளுக்கான புள்ளிவிவரமே நமக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக 2 ஆயிரத்து 43 புகார்கள் வந்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா அளித்துள்ள பேட்டியில், அதிகபட்சமாக கண்ணியத்துடன் வாழும் உரிமைக்காக 603 புகார்களையும், குடும்ப வன்முறை தொடர்பாக 452 புகார்களையும், வரதட்சணைக் கொடுமைகுறித்து 252 புகார்களையும் பெண்கள் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதைத்தவிர, பாலியல் தொந்தரவு (194 புகார்கள்), போலீஸ் அடக்குமுறை (113 புகார்கள்), சைபர் குற்றங்கள் (100 புகார்கள்), பாலியல் வல்லுறவு முயற்சி (78 புகார்கள்), பாலியல் துன்புறுத்தல் (38 புகார்கள்) உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாகவும் பெண்கள் புகார்களை அளித்துள்ளதாகவும் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.
40 நாட்களில் மட்டும் 24 குழந்தை திருமணங்கள்!
தெலுங்கானா மாநிலத்தில் பொது முடக்க காலத்தில் மட்டும் 204 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக தெலுங்கானா சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக பேட்டி அளித்திருக்கும் அதிகாரி புருந்தாதர் ராவ், “பள்ளிகள் மூடப்பட்டு குழந்தைகள் வீட்டில் இருப்பதால் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாகவும், திருமணம் செய்துவிட்டால், தங்கள் கடமை முடியும் என்றுபெரும்பாலான குடும்பங்கள் நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதில், “சமூக ஊடக தளங்களில் மகளிர் ஆணையத்தின் செயல்பாடு அதிகரித்துள்ளதால் புகார்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் இருந்தும் நாங்கள் புகார்களை பெறுகிறோம். புகார்களுக்காக தற்போது வாட்ஸ் – ஆப் எண் வெளியிட்டுள்ளோம். நாங்கள் உதவி செய்வது அறிந்து, எங்கள்மீது நம்பிக்கை வைத்து பெண்கள் பலர் எங்களை அணுகி வருகின்றனர். எங்களின் சமூக ஊடக செயல்பாடு காரணமாகவே எங்களிடம் குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன. வாட்ஸ் -ஆப் எண்ணில் எங்களை அணுகுவது பெண்களுக்கு எளிதாக உள்ளது. பெண்கள் நலனுக்காகவும் அவர்கள் அதிகாரம் பெறுவதற்காகவும் மகளிர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதனால் பெண்கள் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் எங்களை அணுகலாம்” என்று ரேகா சர்மா கூறியுள்ளார்.
பெண்களுக்கு எதிராக 19 விதமான கொடுமைகள்
ஆண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெண்களின் எண்ணிக்கை இல்லாதபோது திருமணத்துக்குப் பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இது குழந்தைத் திருமணத்துக்கு வழிவகுக்கும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம். பெண்களுக்கு எதிராக 19 விதமான கொடுமைகள் இந்தியாவில் நிலவுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாகப் பெண்ணுறுப்புச் சிதைப்பு, குழந்தைத் திருமணம், பெண் குழந்தைகள் மீதான பாகுபாடு போன்றவை பிரதானமானதாக இருக்கின்றது.
இவை அக்குழந்தைகளின் மரணத்துக்கும் பல நேரம் காரணமாக அமைந்துவிடுகிறது. அவர்களின் திறமைகளையும் ஆளுமையையும் வெளிக்கொணர்வதிலிருந்து தடுக்கிறது. இது அப்பட்டமான மனித உரிமை மீறலென்றும் அறிக்கை சுட்டுகிறது.
மாற்றம் ஏற்படுத்திய தொட்டில் குழந்தைத் திட்டம்
1994-ல் தமிழக அரசால் இயற்றப்பட்ட சட்டம், ஸ்கேன் சென்டர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைத் தெரிவிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக்கியது. இது பாலினத் தேர்வின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்வதைச் சிறிது தடுத்தது.
பாலினத் தேர்வின் அடிப்படையில் பெண் சிசுக்கொலை நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் 1992-ல் தமிழகத்தில் ‘தொட்டில் குழந்தைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டது. சேலம் மாவட்டத்தில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் பின்னர் மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பெண் குழந்தைகளைக் கொல்வது, பொது இடத்தில் குழந்தையை வீசிச் செல்வது போன்றவற்றை இத்திட்டம் சற்று குறைத்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. ஆனால், கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது. எனவே, தொட்டில் குழந்தைத் திட்டம் இம்மாவட்டங்களுக்கும் அப்போது விரிவுபடுத்தப்பட்டது.
அதிகரிக்கும் கருக்கலைப்பு, பெண் சிசுக் கொலை
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றபோதும் சமீபத்திய தகவல்கள் தமிழகத்தின் ஆண் – பெண் விகிதாச்சாரத்தைச் சற்று கூர்ந்து கவனிக்கச் செய்துள்ளது. 2013-14-ல் ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் என்கிற நிலையிருந்தது. 2018-19-ல் அது 931ஆக உயர்ந்துள்ளது. ஆனால், சில மாவட்டங்களில் இது கணிசமான சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாகத் தஞ்சை மாவட்டத்தில் 2014 –ம் ஆண்டு குழந்தைகள் பிறப்பு விகிதத்தின்படி ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 914 என்கிற நிலை மாறி 2017-ல் 950-ஆக இருந்தது. 2018–ம் ஆண்டோ அது 908 என்கிற நிலைக்குச் சரிந்துவிட்டது. கடலூர் மாவட்டத்தில் 2013-14 ல் 848 என்று இருந்த எண்ணிக்கை 2017-18-ல் 926 ஆக உயர்ந்து, பிறகு 2019–20-ல் அது 917-ஆகக் குறைந்துள்ளது.
குழந்தைகள் பிறப்பு விகிதத்திலேயே பெண் குழந்தைகள் பிறப்பது குறைகிறதெனில் நிச்சயம் பாலினத் தேர்வின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்யப்படுவதுதான் அதற்கான முக்கியக் காரணமாக இருக்க முடியும். ஸ்கேன் சென்டர்களில் இவை அறியப்படாமல் வேறு எங்கும் இதற்கான வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில ஸ்கேன் மையங்களில் இது குறித்து விசாரணையும் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கூறும் மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது, ஸ்கேன் மையங்கள் மீது கண்காணிப்பைக் கூடுதலாக்குவது, மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்வது, கல்வியறிவை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளைக் கொண்டுதான் பாலினத் தேர்வின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்வதையும் பெண் சிசுக்கொலையையும் கட்டுப்படுத்த முடியும். ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களையும் தமிழக நிலவரத்தையும் ஒப்பாய்வு செய்து சமூகப் பார்வையோடு அதற்கான தீர்வை நோக்கி நாம் முன்னேற வேண்டியுள்ளது.
அரசு விழித்துக் கொண்டு பொறுப்புடன், துணிவாக செயல்பட்டால் தான், பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும். இல்லையெனில் சுதந்திர இந்தியாவில் பெண்கள் அடிமைகளே.
சுகந்தி- தமிழ் மாநில செயலாளர், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம்
பெண்கள் மீதான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான எந்த பிரச்சனையையும் பெரும்பாலான ஊடகங்கள் பிரதிபலிப்பதை, மத்திய அரசு மிரட்டி வருகிறது. பெண்களை பாதுகாப்போம் என்ற பெயரில் கோவில் கருவறைக்குள்ளேயே சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரமும் இங்குதான் நடக்கிறது. தமிழகத்தில் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குடும்ப வன்முறை குற்றங்கள் நடந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் அதிகரிக்கும் குடும்ப வன்முறைகளை கண்டறிய எங்கள் அமைப்பு வாட்ஸ்ஆப் எண்ணை கொடுத்து புகார்களை கண்டறிந்து தீர்வை நோக்கி செயல்பட்டு வருகிறோம். குறிப்பாக, வாட்ஸ் ஆப் எண் மூலம் ஒரு தந்தை, தன் மகளை அவருடைய கணவன் அடித்து துன்புறுத்துவதாக சென்னை நுங்கபாக்கத்தில் இருந்து புகார் ஒன்று வந்தது. அதன் அடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் காவல்நிலையத்துக்கு இரவு 10 மணியளவில் சென்றபோது காவல் துறையினர் புகாரை ஏற்க மறுக்கிறார்கள், ஒரு தேசிய அமைப்பு காவல்துறையை அணுகியபோதே புகார்களை ஏற்க மறுக்கிறார்கள் என்றால் சாதாரண மக்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை நம்ப முடியும். இப்படி பல பிரச்னைகள் காவல்துறைக்கு வராமலேயே இருக்கிறது. இதனால் பல பெண்கள் கொலை செய்யப்பட்டு தற்கொலையாக மாற்றப்பட்டும் வருகிறது. எனவே விழிப்புணர்வு என்பது முதலில் காவல்துறைக்குதான் வேண்டும். காரணம் சமீபத்தில் காவல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் பெண்கள் தொடர்பான பல ஆயிரம் வழக்குகளை நாங்கள் தீர்வு செய்துள்ளோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது .
இதுத்தொடர்பாக காவல்துறையிடம் எப்படி பிரச்சனைகளுக்கு தீர்வு கொண்டுவரப்பட்டது என்று விசாரித்தபோது, பெண்களிடம் சமாதானம் பேசி அவர்களை புகுந்த வீட்டிற்கே அனுப்பியதாக தெரிவித்தனர். அது எப்படி சரியான தீர்வாகும் என்று கேள்விக்குறியாக உள்ளது. இப்படியான குடும்ப பிரச்னைகள் காவல் நிலையத்திற்கு வரும்பொழுது பெரும்பாலான காவல்நிலைய அதிகாரிகள் கூறுவது ஒரு பெண் ஆண் துணை இல்லாமல் வாழ முடியாது, நீ எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உன் புகுந்தவீட்டில் இருப்பதே சரி என்று கூறி அனுப்பிவிடும் போக்கு என்பது தொடர்ந்து வருகிறது. எனவே பெண்கள் பாதுகாப்பு குறித்து முதலில் காவல் துறையினருக்குதான் விழிப்புணர்வு கொடுக்கவேண்டும்.
ஐநா சபையும், தேசிய மகளிர் ஆணையும் வெளியிட்ட அறிக்கை என்பது கணக்கில் வரப்பட்ட புள்ளிவிவரம் தான். இன்னும் இந்தியாவில் கணக்கிற்கு வராத அதாவது காவல் நிலையத்திற்கு வராத எவ்வளவோ தற்கொலைகள், கொலைகள், பெண்கள் கடத்தப்படுவது, குடும்ப வன்முறைகள் இருக்கிறது. அதையெல்லாம் கணக்கில் எடுத்தால் இந்த புள்ளிவிவரம் வெறும் துச்சமாகவே பார்க்கப்படும்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுப்பதாலோ, அல்ல வேறு ஏதேனும் கொடுமையான தண்டனைகள் கொடுத்தலோ இப்படியான குற்றங்கள் குறைய வாய்ப்புகள் இல்லை. குற்றங்களை குறைக்க சமூகத்தில் இருந்தே மாற்றம் வேண்டும். உலகில் இரண்டாம் பிரஜை என்று பெண் அழைக்கப்படுகிறாள். எனவே அவள் அனைத்திலும் இரண்டாவது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறாள். “Goodtouch, badtouch’’ என்று பெண் குழந்தைகளுக்கு மட்டும் கற்றுக் கொடுத்தால் போதாது don’ttouch என்று ஆண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். நமது கல்வி பாடத்திட்டத்தில் லட்சுமி 2 பொம்மை வைத்திருந்தாள். பாலு 8 பந்துகள் வைத்திருந்தால் என்று குறிப்பிட்டிருக்கும் அது எவ்வளவு மோசமான ஆணாதிக்க சிந்தனையை தூண்டும் வரிகள் என்று நாம் சிந்திக்க வேண்டும். பெண்கள் கையில் பொம்மைகள் தான் இருக்க வேண்டும், ஆண்கள் கையில் பந்துதான் இருக்க வேண்டும் என்று சிறு வயதிலேயே அவர்களின் ஆள் மனதில் தவறான கல்வியை புகுத்துகிறார்கள். இப்படியான மோசமான கல்வியை விட்டுவிட்டு ஆண் – பெண் சமம் என்று கற்றுக்கொடுக்க வேண்டும். குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் குடும்பத்தில் இருந்தும் மாற்றம் வரவேண்டும். தந்தை அம்மாவை குடித்து விட்டு அடித்தால் அதே சிந்தனை மகனுக்கும் வரும். எனவே வீட்டிலும், கல்வியிலும் நிச்சயம் மாற்றம் கொண்டுவந்தால் மட்டுமே இப்படியான பிரச்னைகள் படிப்படியாக குறையும்.
கிருத்திக்கா ஸ்ரீனிவாசன் – சமூக ஆர்வலர்
இந்தியாவில் மோடி அரசு “பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்” என்று பெண்களை பாதுகாக்கும் சட்டங்களை எல்லாம் கொண்டுவந்தார். ஆனால் இதுவரை இந்தியாவில் பெரிதும் பேசப்பட்ட பாலியல் குற்றம் சம்பவங்களுக்கு அவர் இதுவரை வாயே திறக்கவில்லை. குறிப்பாக கேரளாவில் கடந்த மாதம் பன்றிக்கு வைக்கப்பட்ட வெடிகுண்டை கர்ப்பிணி யானை ஒன்று முழுங்கி உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மத்தியஅரசு கேரளா அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யக்கோரி கட்டளையிட்டது. ஆனால் இதே காலகட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 4 சிறுமிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். தந்தையே தன் மகளை மூட நம்பிக்கை என்ற பெயரில் கொலை செய்துள்ளார், 10-ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ கொடூரமாக ஆளும்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மூலம் கொல்லப்பட்டார், புதுக்கோட்டையில் ஒரு சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். திருச்சியில் 9-ஆம் வகுப்பு மாணவி எரித்து கொல்லப்பட்டார். ஆனால் இந்த சம்பவங்கள் குறித்து மத்திய அரசு எந்த ஒரு அறிக்கையும் மாநில அரசிடம் கேட்கவில்லை. ஒரு யானைக்கு காட்டப்படும் முக்கியத்துவம், தொடர்ந்து கொல்லப்பட்டு வரும் சிறுமிகளுக்கு இல்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது.
கடுமையான சட்டங்கள் ஏற்படுத்து மூலம் இப்படியான குற்றங்களை நாம் குறைக்க முடியாது. இருக்கின்ற சட்டங்களை முறைப்படுத்தினாலே போதுமானது. இன்றைய சட்டமானது பணம் இருப்பவர்களுக்கு ஒரு நியாயமும், பணம் இல்லாதவர்களுக்கு ஒரு நியாமும் வழங்குகிறது. குறிப்பாக பொள்ளாச்சி பாலியல் குற்றங்களில் ஈடுப்பட்டவர்களுக்கு நியாமான தீர்ப்பு வழங்கவில்லை, உடுமலை சங்கர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு விடுதலை வழங்கியுள்ளது. இப்படி சட்டத்திலேயே குளறுபிடிகள் இருக்கும்போது நாம் எத்தனை கடுமையான சட்டங்களை கொண்டு வந்தாலும் அது தீர்வாகாது. அதே நேரத்தில் பாலியல் குற்றங்களுக்கு எப்படி போக்சோ சட்டம் இருப்பது அனைவருக்கும் தெரிந்துள்ளதோ.. குழந்தைகள் கடத்தலுக்கு என்ன சட்டம்? கணவன் மாமியார் மூலம் ஏற்படும் துன்புறுத்தலுக்கு என்ன சட்டம்? இப்படி பெண்கள் மீது நடத்தப்படும் அனைத்து விதமான துன்புறுத்தலுக்கும் என்ன சட்டம் பாயும் என்பது குறித்த விழிப்புணர்வு வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பல மகளிர் அமைப்புகள் பெண்கள் பிரச்சனைகள் குறித்து போராடி வருகிறது. அப்படியான அமைப்புகளை இந்த அரசு அழைத்து பேசவேண்டும். எந்த மாதிரியான முயற்சிகளை நாம் வரும்காலங்களில் எடுப்பது குறித்த அறிக்கை அவர்களிடம் மட்டுமே உள்ளது.