தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை பொதுப் போக்குவரத்து இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6-ம் கட்டமாக கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்புக்கேற்றவாறு அந்தந்த மாவட்டங்களுக்கான தளர்வுகளும், கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக 6-ம் கட்ட ஊரடங்கில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும், இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூலை 31 வரை தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுப் போக்குவரத்து சேவை இல்லை எனவும், அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.