தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. நகைக்கடனை நிறுத்துமாறு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அனைத்து மாவட்ட மற்றும் மண்டல இணை பதிவாளர்களுக்கு செல்போன் மூலம் நேற்று ஒரு குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில் அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வழங்குவதை உடனடியாக நிறுத்தி வைக்கும்படி அவர் ஆணை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 23 மத்திய கூட்டுறவு வங்கிகள், 128 நகர கூட்டுறவு வங்கிகள், 4250 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவை அனைத்திலும் இன்று முதல் நகைக்கடன் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்புக்கு அரசு எவ்வித காரணமும் கூறப்படவில்லை. ஆனால் நகைக்கடன் வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி மட்டுமே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று கூட்டுறவு வங்கி மற்றும் சங்கத்துக்கு வந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் சிலர் வங்கி ஊழியரிடம் திடீரென நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை கேட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் தங்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதாக கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சம்மேளனமும் கூறியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தப்படுவதால் தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தோற்றால் பலர் வேலை இழந்துள்ளதால் வருமானம் இன்றி தவிக்கின்றனர். தற்போதைய சூழலில் பலரும் நகைகளை அடகு வைத்தே செலவை சமாளித்து வருகின்றனர். தற்போது எந்த காரணமும் இன்றி நகைக்கடன் நிறுத்தப்பட்டுள்ளதால் தனியார் அடகு கடைகளை மக்கள் நாட வேண்டியுள்ளது.