சென்னையில் நகைக்கடை ஒன்றில் கடந்த மாதம் 14 கிலோ தங்கம் திருடபட்ட வழக்கில், கடை உரிமையாளரின் மகனே திட்டமிட்டு நகைகளைத் திருடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
சவுகார்பேட்டை, யானைகவுனியில் ராஜ்குமார், சுபாஷ் போத்ரா ஆகியோர் இணைந்து, கடந்த இருபது ஆண்டுகளாக சங்கம் கிராஃப்ட்’ எனும் பெயரில் தங்க நகைகளை டிசைன் செய்து சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தனர். புதிய டிசைன்களை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வாடிக்கையாளர்களுக்குக் காட்டி அவற்றை மீண்டும் லாக்கரில் வைத்துவிடுவது வழக்கம். அதேபோன்று, கடந்த ஆகஸ்ட் மாதம் 21 – ம் தேதி தங்க நகை டிசைன்களை வாடிக்கையாளர்களுக்குக் காட்டிவிட்டு லாக்கரில் பூட்டி வைத்தனர். அதன்பிறகு, 25 – ம் தேதி செவ்வாய்க் கிழமையன்று நகை டிசைன்களை வாடிக்கையாளர்களுக்குக் காட்ட லாக்கரைத் திறந்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 14 கிலோ தங்கம் மாயமாகியிருந்ததை கண்டு, அதிர்ச்சியான ராஜ்குமாரும், சுபாஷ் போத்ராவும் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடையின் பூட்டு மற்றும் லாக்கர் உடைக்கப்படாமல் நகைகள் திருடப்பட்டிருந்தது போலீசாருக்கு நகைக்கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களின் குடும்பத்தினர் மேல் சந்தேகம் ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் அந்தப் பகுதியில் பதிவான செல்போன் சிக்னல்கள் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த விசாரணையில் நகைக்கடை உரிமையாளர்களில் ஒருவரான சுபாஷ் போத்ராவின் மகன் ஹர்ஷ் போத்ரா நகைகளைத் திருடியது தெரியவந்தது. உடனடியாக, ஹர்ஸ் போத்ராவைக் கைதுசெய்த போலீசார் லாக்கரில் பதுக்கப்பட்டிருந்த 12 கிலோ நகைகளையும், கடைக்குள் பதுக்கப்பட்டிருந்த 2 கிலோ நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் “தான் நடத்தி வந்த ஆன்லைன் டிரேடிங் தொழிலில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனை ஈடுசெய்யவே சொந்தக் கடையில் திருடினேன் எனவும் ஹர்ஷ் போத்ரா ஒப்புக்கொண்டுள்ளார் .
மேலும், தந்தையிடம் இருந்த லாக்கர் சாவியை எடுத்து நகைகளைத் திருடினேன்” என்று வாக்குமூலம் அளித்தார் ஹர்ஷ் போத்ரா. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹர்ஷ் போத்ரா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.