மதுரையில் இரண்டு வாரத்தில் 26 ரவுடிகள், கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகர் பகுதிகளுக்குட்பட்ட 22 காவல் நிலையங்களில், 2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மதுரை மாநகரில் ஒரு சில பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக, பொது இடத்தில் பட்டப்பகலில் கொடூர கொலை சம்பவங்கள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து அதிகரித்து வந்த கொலைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், மதுரை மாநகர காவல் துறை ஆணையர் தலைமையில் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ரவுடிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படும் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், முன்விரோதத்தின் காரணமாக கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக, பல வழக்குகளில் தொடர்புடைய 26 பிரபல ரவுடிகளை, இரண்டே வாரத்தில் போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பல பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.




