பண்டிகை காலத்தை முன்னிட்டு கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும் என, மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், தேவையை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வப்போது கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகிறது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகளை கூடுதல் நேரம் திறந்திருக்கவும், சமீபத்தில் அரசு அனுமதி அளித்தது.
அதைத்தொடர்ந்து, தற்போது சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

வார இறுதி நாட்களில்
தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வணிக வளாகங்களுக்குச் சென்று பொருட்களை வாங்கிட ஏதுவாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, 24.10.2020 முதல் 26.10.2020 வரை, 31.10.2020 & 01.11.2020 மற்றும் 07.11.2020 & 08.11.2020 உள்ளிட்ட ஏழு நாட்களுக்கு, 25 வழித்தடங்களில், 50 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டு உள்ளது.




