தனியாக இருந்த மூதாட்டியை கழுத்தை நெரித்துக் கொன்று 15 சவரன் தங்க நகை பறிக்கப்பட்ட புகாரில் 17 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் தனது தாயார் நாகலட்சுமி (72) உடன் மாரியப்பன் வீதியில் வசித்து வந்தார். கடந்த 16-ம் தேதி காலை வழக்கம் போல செந்தில்வேல் வேலைக்கு சென்றுவிட்டார்.
ஆனால் நீண்ட நேரமாக அவருடைய வீடு அமைதியாக இருந்ததை அடுத்து, அக்கம் பக்கத்தினர் செந்தில்வேலுக்கு தகவல் கொடுத்தனர். அவர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது, மூதாட்டி நாகலட்சுமி சடலமாக கிடந்தார்.
உடனடியாக செந்தில்வேல் பொள்ளாச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து விசாரணை நடத்தியதில் மூதாட்டி நாகலட்சுமி கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் மூதாட்டி அணிந்திருந்த 15 சவரன் நகை காணாமல் போனதும் தெரிந்தது.
இதுகுறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களை கொண்டு காவலர்கள் விசாரணை நடத்தினர். அதில் மாரியம்மன் வீதிக்குள் வந்த சிறுமி ஒருவர், மூதாட்டி வீட்டுக்குள் சென்று ஒரு மணிநேரத்துக்கு பிறகு திரும்பி வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
சிறுமியை அடையாளம் கண்டு போலீசார் உடனடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காதலித்த இளைஞரை திருமணம் செய்வதற்காக பணம் தேவைப்பட்டது. அதனால் மூதாட்டியை கொலை செய்து நகையை களவாடிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமி மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, அவரை கைது செய்தது. சிறுமியின் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த தங்க நகை மீட்கப்பட்டது. திருமணம் செய்ய ஆசைப்பட்டு மூதாட்டியை 17 வயது சிறுமி கழுத்தை நெரித்துக் கொன்ற இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.