அபிராமம் சார்பு ஆய்வாளர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விருதுநகர் மாவட்டம் கீழ்குடியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன்(44). இவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமம் காவல்நிலையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 28.4.2006-ம் தேதி இரவு காவல் நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்களில் ரோந்து சென்றுள்ளார். அப்போது நந்திசேரி கிராமம் அருகே 8 பேர் கொண்ட கும்பல் சார்பு ஆய்வாளரை வழிமறித்து சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு, அவரிடம் இருந்த மோதிரம், கைக்கடிகாரம், மொபைல் போன், மோட்டார் ஆகியவற்றை பறித்தது.
அந்நேரம் கமுதி அருகே மண்டலமாணிக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக்காவலர் போஸ்(40), பணிமுடிந்து தனது சொந்த ஊரான அபிராமம் அருகே முத்தாதிபுரத்திற்கு மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்துள்ளார். எட்டுப்பேர் கொண்ட கும்பல் தலைமைக்காவலர் போஸையும் வழிமறித்து தாக்கி, அவரிடம் இருந்த மோதிரம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியது. இது தொடர்பாக அபிராமம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, 8 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு பரமக்குடி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய 8 பேரில், தங்கவேல் மகன் முத்துராமலிங்கம் (38) விடுதலை செய்யப்பட்டார். இறந்த துரைப்பாண்டி (40), முனியசாமி (38) இருவரும் வழக்கில் இருந்து நீக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் மீதியுள்ள மதுரை கீரைத்துரையைச் சேர்ந்த முனியசாமி மகன் முருகேசன் (38), வில்லாபுரத்தைச் சேர்ந்த ஞானவேல்பாண்டியன் (39), கீரைத்துரையைச் சேர்ந்த பெரியசேர்வை மகன் ரவிசண்முகம் (36), வீமராஜ் மகன் திருமூர்த்தி (39), தவசி மகன் முத்துராமலிங்கம் (42) ஆகிய 5 பேருகு்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தும், கூடுதல் மாவட்ட நீதிபதி மலர் மன்னன் தீர்ப்பு வழங்கினார்.
மேலும் தலைமைக்காவலரை தாக்கிய வழக்கில், 5 பேருக்கும் 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 1000 அபராதம் விதித்தும் கூடுதல் மாவட்ட நீதிபதி தீர்ப்பளித்தார்.