திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடிபழக்கத்தால் கணவனை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், சமீபத்தில் கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்ததாகவும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலங்குப்பம் பகுதியில் எலெக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்த ரமேஷ் பாபுவிற்கு, ஜெயந்தி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 10 மற்றும் 6 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.
இதனிடையே, கடந்த 28ம் தேதி அதே பகுதியில் உள்ள ஏரி கால்வாயில், அவரது பைக் கிடக்க அங்கேயே ரமேஷ் பாபுவும் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.
தகவலறிந்த ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீசார், சடலத்தை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இது விபத்தாஅல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ஆரம்பம் முதலே மனைவி ஜெயந்தியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது. அவரது முன்னுக்கு பின் முரணான தகவல்கள் போலீசாரின் விசாரணையை தீவிரப்படுத்தியது. அதில் அதிர்ச்சி தரக் கூடிய பல உண்மைகள் வெளிவந்தன. அதன் படி, ஜெயந்தி தினமும் குடித்து விட்டு ரமேஷ் பாபுவை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் மனைவியும் மாமியார் சாரசாவும் அடிக்கடி ரமேஷ் பாபுவுடன் சண்டையிட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு மாதத்திற்கு முன்பு நான்கு பேர் கொண்ட கூலிப்படையை வைத்து தேசிய நெடுஞ்சாலையில் ரமேஷ் பாபு சென்று கொண்டிருந்த போது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சிசித்துள்ளனர். அதில் ரமேஷ் சில காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனால் கடந்த 27 ஆம் தேதி ரமேஷ் பாபுவை பின்தொடர்ந்து சென்ற தனுஸ், கெளதம், ராமன், விக்னேஷ் என்ற அந்த கூலிப்படை ஒரு விவசாயப்பகுதியில் வைத்து ரமேஷ் பாபுவின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியது. பிறகு அவரை கொலை செய்து விபத்து போல் காண்பிக்க உடலையும் இருசக்கர வாகனத்தையும் ஏரி கால்வாய் புறம் வீசிவிட்டு சென்றுள்ளது. மகனை காணாததால் ரமேஷ் பாபுவின் தந்தை ராமமூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் ஒரு நாள் முழுவதும் தேடி அலைந்துள்ளனர். மறுநாள் அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தபின் உண்மை வெளிசத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து, கூலிப்படையை சேர்ந்த நான்கு பேருடன் மனைவி ஜெயந்தி, மாமியார் சரசா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.




