ஜெயலலிதா இல்லாத நிலையில் தேர்தல் நடைபெற இருப்பதால் அ.தி.மு.க. கட்சிக்கு தாயில்லாத பிள்ளையாய் நினைத்து வாக்களியுங்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை :
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பொதுமக்களுக்கு வழங்கினார்.அப்பொழுது அவர் பேசியதாவது:
திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு வழங்கியபோது அவர்களது கட்சியின் சின்னமான உதயசூரியன் பொறித்த பொங்கல் பரிசை வழங்கினார்கள். ஜெயலலிதா இல்லாத நிலையில் நடைபெறவுள்ள இந்த சட்டசபை தேர்தலில் தாயில்லாத பிள்ளைகளாக அதிமுக தற்போது இருக்கிறது ,அதனால் மக்கள்தான் அதிமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், நல்லவர் ஆட்சி செய்தால் மூன்று பருவங்களில் மழை பொழியும்.அதனால் தான் என்னவோ முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் ஜனவரியிலும் மழை பொழிகிறது. ஆண்டவனே ஆட்சி செய்தாலும் ஸ்டாலின் குறை மட்டுமே கூறுவார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முதலில் பெட்டிக்குள் இருக்கும் பாம்பு போல இருப்பார்கள். பின்பு, ஆட்சிக்கு வந்தவுடன் படமெடுத்து ஆடுவார்கள்’ என்றும் விமர்சனம் செய்துள்ளார்.




