அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய அறிவிப்பு யூஜிசி விதிகளுக்கு எதிரானது என ஏஐசிடிஇ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி கலை & அறிவியல், பொறியியல் மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கான
அரியர் தேர்வு மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தாலே தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.
அரசின் இந்த முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மனு மீதான விசாரணையின்போது தமிழக அரசு, பல்கலைகழக மானிய குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டது.
அதன்படி, இந்த வழக்கில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.
அதில், தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்யாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளுக்கு முரணானது. கொரோனா பேரிடர் காலத்தில் இறுதியாண்டு மாணவர்கள் தவிர, பிற மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது சிக்கலானது என்பதால், அடுத்த கல்வியாண்டுக்கு மாணவர்களை முன்னேற்றி, அவர்கள் தொடர்ந்து ஆன் லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள செய்வதற்கு ஏதுவாக பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில் இறுதி பருவத் தேர்வு கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும். மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை. அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்கு புறம்பானது.
இறுதியாண்டு மாணவர்களின் அரியர் பாடங்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள் அறிவித்துள்ளது. இந்த விதிகளை பின்பற்ற அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள், மீண்டும் விசாரணைக்கு வர உள்ளன
மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட்து கட்டாயம் நிறைவேற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், ஏஐசிடிஇ தாக்கல் செய்துள்ள இந்த மனு மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.