போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்கள், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி புதிய ஊதியத்திற்குரிய 21 மாதகால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும், பணியாளர் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 22.01.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், மக்கள் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், மக்களின் நலனுக்காக பணியாற்றும் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், நிர்வாக கட்டுப்பாட்டை நிலைநிறுத்தவும் சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாக, 7,898 அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தவிர, சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட 17,686 ஆசியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 408 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ரசு ஊழியர்களும், ஆசிரியப் பெருமக்களும் தங்களுடைய போராட்டங்களை உடனடியாக கைவிட்டு, மக்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென 29.1.2019 அன்று நான் அன்புடன் கேட்டுக் கொண்டேன். இதனையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுக் கொள்வதாகக் கூறி உடனடியாக பணிக்கு திரும்பினர். அரசால் எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளையும், வழக்குகளையும் திரும்ப பெற, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஏற்கனவே என்னிடம் நேரில் கோரிக்கை வைத்திருந்தனர். இக்கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, மறப்போம், மன்னிப்போம் என்ற உயரிய கருத்தை மனதில் கொண்டு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் அரசு கைவிடுகிறது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.