வரும் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு சொத்து வரியை செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சமீபத்தில் மாநில முழுவதும் 50 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்துவரியை உயர்த்தியது. இது தமிழகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் சொத்து வரி கணக்கை தாக்கல் செய்வது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சிக்கு ஏற்கனவே சொத்து வரி செலுத்தப்பட்டு வந்த விகிதத்திலேயே செலுத்தலாம், ஏப்ரல் 15-ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல குறிப்பிட்ட தேதிக்குள் கட்ட தவறினால் கூடுதலாக 2 சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் ஆன்லைன் வழியாகவும் அல்லது இ-சேவை மையங்கள், கிரெடிட், டெபிட் கார்டு கொண்டு சொத்து வரி செலுத்தலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய சொத்து வரி தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சென்னை மாநகராட்சி அமல்படுத்தும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.