சென்னை புறநகர் மினசார ரயில் சேவை அக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தப்பட்ட கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து அனைத்து வகையான பயணிகள் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து, பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகளின் பேரில், சொந்த ஊர்களுக்கு திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
தொடர்ந்து, வழங்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதோடு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கி உள்ளது.
இந்த சூழலில், அக்டோபர் 7-ம் தேதியில் இருந்து புறநகர் மின்சார ரயில் சேவையம் தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே வாரிய தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
புறநகர் ரயில் சேவையில் பணியாற்றும் பணியாளர்கள் அக்.1-ம் தேதியில் இருந்து முழுமையாக பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
வழக்கமாக சென்னையில் 450-க்கும் மேற்பட்ட புறநகர் ரயில் சேவை தினசரி செயல்பட்டு வந்த நிலையில் தற்போது தினமும் 300 முறை ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் தேவைக்கு ஏற்ப முழுமையாக சேவை துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் புறநகர் ரயில் சேவை எங்கே வரை செயல்படும், எத்தனை முறை என்ற திட்டம் தற்போது வரையறுக்கப்பட்டு வருகிறது. இதுவரை புறநகர் ரயில் சேவைக்கான வழிமுறைகளை மத்திய ரயில்வே வெளியிடவில்லை. ஆனால் புறநகர் ரயில் சேவையை தமிழக அரசு அனுமதிக்க தயாராக இருக்கிறது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.