தனியார் மருத்துவமனை கழிவறைக்குள் பெண் சிசுவை வீசி சென்ற பெண் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரை அழைத்துச் சென்ற காவல்துறை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பேடு பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை கழிவறைக்குள் நேற்று முன்தினம் பெண் சிசு சடலமாக மீட்கப்பட்டது. குழந்தை உடலில் தொப்புள்கொடி இருந்ததால், கழிவறைக்குள் பிரசவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை வளாகம் மற்றும் சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல்துறை விசாரணை நடத்தியது. அப்போது சம்பவம் நடந்த அன்று கர்ப்பிணி பெண் ஒருவர் வேறொரு பெண்ணுடன் வருவதும், மருத்துவமனைக்குள் சென்று அவர் மட்டும் ஆட்டோவில் ஏறி செல்வதும் பதிவாகி இருந்தது.
தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மருத்துவமனைக்குள் சென்ற பெண் கும்மிடிபூண்டியைச் சேர்ந்த சாய்ராபானு என்பது தெரியவந்தது. அவருடைய இருப்பிடத்தை கண்டுப்பிடித்த காவல்துறை, வீட்டிலிருந்து காவல்நிலையம் அழைத்து வந்தது.
தொடர்ந்து அவர் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்ணுக்கு பரிசோதனைகள் முடிந்தவுடன், முடிவுகளை வைத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரியவந்துள்ளது.
போலீசார் காவலிலுள்ள சாய்ராபானுவுக்கு திருமணமாகி கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டு கருவுற்றுள்ளார். பிரசவத்தை மறைப்பதற்காக மருத்துவமனைக்கு வந்து, குழந்தை பெற்றுவிட்டு, குழந்தையை அப்படியே விட்டுவிட்டு சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் குழந்தை இறந்து தான் பிறந்ததா அல்லது பிறந்து இறந்ததா அல்லது சாய்ராபானு கொன்றுவிட்டாரா என்பது போலீசார் விசாரணையில் தெரியவரும். இந்த சம்பவம் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி மற்றும் சோழவரம் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.