
சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் விதமாக உலக எக்ஸ்போ 2022 நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் புறப்பட்டுச் சென்றார்.
சர்வதேச தொழில்துறைக்காக எக்ஸ்போ 2022 துபாயில் கடந்தாண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் 31-ம் தேதியுடன் எக்ஸ்போ நிறைவடைகிறது. இந்நிகழ்வின் கடைசி வாரம் ‘தமிழ்நாடு வாரமாக’ அனுசரிக்கப்படுகிறது.
அதை முன்னிட்டு நிகழ்வில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளார். எக்ஸ்போவில் நாளை நடைபெறும் நிகழ்வில் அவர் தமிழ்நாடு அரங்கை திறந்துவைக்கிறார். இதன்மூலம் பல்வேறு சர்வதேச தொழில் முதலீடுகள் குறித்த கருத்தரங்குகள், கருத்து பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.
மேலும் தொழில் முதலீடு சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகக் கூடும். துபாய் சர்வதேச எக்ஸ்போ 2022 நிகழ்வில் பங்கேற்பதற்கு முதல்வர் ஸ்டாலினுடன், அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன், தொழில்துறை வழிகாட்டு குழு தலைவர் பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் புறப்பட்டுச் சென்றனர்.
அங்கு முதல்வர் ஸ்டாலின், துபாயிலுள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள், தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். அதுதவிர துபாய் நாட்டு அரசியல் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




