உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று துபாய்க்கு செல்கிறார்.
கடந்த அக்டோபர் 31-ம் தேதி துபாயில் உலக எக்ஸ்போ கண்காட்சி துவங்கியது. வரும் 31-ம் தேதி இந்நிகழ்வு நிறைவு பெறுகிறது. இந்த எக்ஸ்போவில் நாளை முதல் வரும் 31-ம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
அதற்காக முதல்வர் ஸ்டாலின் துபாய்க்கு செல்லவுள்ளார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை அவர் நாளை திறந்துவைக்கவுள்ளார். இந்த அரங்கில் தமிழ்நாட்டின் தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், தொழில் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதுல் உள்ளிட்ட முக்கிய சிற்பபுகளை எடுக்காட்டும் விதமாக காட்சிப்படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்படவுள்ளன. இதை சுமார் 2.5 கோடி மக்கள் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் துபாயில் இருந்து அபுதாபிக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், முதலீடுகளை பெறுவதற்கான முயற்சியில் துறை சார்ந்த வல்லுநர்களை சந்தித்து பேசுகிறார். அதை தொடர்ந்து அரபு நாடுகளில் வசித்து வரும் தமிழர்களையும் அவர் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.