கோவை மாவட்ட தி.மு.க. 5 ஆக பிரிக்கப்பட்டு, புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பல்வேறு கட்சிகளும் தங்களது உட்கட்சியை பலப்படுத்தி பணியில் ஈடுபட்டு வருகிறது. தி.மு.க.விலும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், நிர்வாகிகளுடன் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஆலோசனை நடத்திய பின்னர் பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும் மாற்றம் செய்து வருகிறார். இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் சிறப்பாக நடைபெற்றிடவும், கோவை வடக்கு – கோவை தெற்கு- கோவை கிழக்கு – கோவை மாநகர் கிழக்கு – கோவை மாநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகள் பின்வருமாறு மாற்றி அமைக்கப்படுகிறது.
புதிய பொறுப்பாளர்கள்
கோவை வடக்கு மாவட்டம்- மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், கோவை தெற்கு மாவட்டம் – பொள்ளாச்சி, வால்பாறை (தனி), கோவை கிழக்கு மாவட்டம் – சூலூர், கிணத்துக்கடவு, கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் – கோவை தெற்கு, சிங்கா நல்லூர், கோவை மாநகர் மேற்கு மாவட்டம் – கவுண்டம்பாளையம், கோவை வடக்கு. இவ்வாறு பிரிக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் அடிப்படையில் கோவை வடக்கு – கோவை தெற்கு – கோவை கிழக்கு – கோவை மாநகர் கிழக்கு – கோவை மாநகர் மேற்கு ஆகிய மாவட்டக் கழகங்கள் செயல்படும்.
இந்த புதிய மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதன்படி,
- கோவை வடக்கு – சி.ஆர். ராமச்சந்திரன்
- கோவை தெற்கு – தென்றல் செல்வராஜ்
- கோவை கிழக்கு – சேனாதிபதி
- கோவை மாநகர் கிழக்கு – கார்த்திக்
- கோவை மாநகர் மேற்கு – பையா என்ற கிருஷ்ணன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.