திருச்சியில், ஆன்லைன் வகுப்பு புரியாதக் காரணத்தால், கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பாலக்கரையின், சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள இளங்கோ தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். இவரின் 19 வயது மகள் லலிதா 12-ஆம் வகுப்பு முடித்துள்ளார். லலிதா, தற்போது தனியார் கல்லூரி ஒன்றில், இளங்கலை ஆங்கிலம் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். இவருக்கு, தற்போது ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
லலிதா, 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று வந்துள்ளார். எனவே, ஆன்லைன் வழியான ஆங்கில வகுப்பு தனக்குப் புரியவில்லை என பெற்றோரிடம் வேதனை தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் லலிதாவை ஆறுதல் படுத்தியுள்ளனர்.
இதுக்குறித்து, ஆன்லைன் வகுப்பு கற்றுத் தரும் ஆசிரியர்களிடமும் சொல்லியிருக்கிறார், லலிதா. ஆசிரியர்களும், போக போக எல்லாம் சரியாகி விடும், இன்னும் சில நாட்களில் புரிந்து விடும் எனக் கூறி வந்துள்ளனர்.
ஆனாலும், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்து வந்த லலிதா, மனமுடைந்து, வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அக்கா தூக்கில் தொங்குவதைப் பார்த்த லலிதாவின் தம்பி, அதிர்ச்சியில் கூச்சலிட்டுள்ளான். உடனே, வீட்டின் அருகிலிருந்தவர்கள் லலிதாவை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், லலிதா ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தால், அப்பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும், இதுப்போன்ற சம்பங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், கல்வியாளர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.




