சீர்காழி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பி.வி.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிற நிலையில், கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடக் கூடிய, அமைச்சர்கள், மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் உட்பட பலரும், இந்த நோய் தொற்றிற்கு அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் பல கட்சியை சார்ந்தவர்களும், கொரானா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில், நாகை மாவட்டம் சீர்காழி அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதிக்கு, இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தின் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்திட, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகைக்கு வருகை தர இருப்பதால், நிகழ்வில் பங்கேற்பதற்காக பரிசோதனை மேற்கொண்ட எம்.எல்.ஏ. பி.வி.பாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது, இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பி.வி.பாரதி மயிலாடுதுறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




