கோவையில் நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் நகைபட்டறை தொழிலாளர்களுக்கும் தங்கத்துடன் தொடர்பு உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு அடைவதால், தங்கம் மூலம் பரவுகிறதா என்ற சந்தேகம் சுகாதாரத்துறைக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
கோவையில் தற்போது கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. பொது முடக்கம் மற்றும் ஊரடங்கு தளர்வுக்கு பின் பல்வேறு தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுடன் பணிகளை துவங்கியுள்ளது. இதில் தங்க நகைக்கடைகள், நகைப்பட்டறைகளை சேர்ந்தவர்களும் அடங்கும்.
இந்நிலையில், நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிகளவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதில், கோவை காந்தி ரோட்டில் செயல்பட்டுவரும் கல்யாண் ஜுவல்லரி தங்க நகைக்கடை ஒன்றில் 48 பேர், மற்றொரு கடையில் 58 பேர், துடியலூர் அருகே செயல்பட்டு வரும் நகை தயாரிப்பு நிறுவனத்தில் உரிமையாளர் உள்பட சுமார் 25 பேருக்கும் அதிகமாக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். செல்வபுரத்தில் அமைந்துள்ள தங்கநகை பட்டறையில் வேலை செய்து வந்த 120க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தங்க நகைப்பட்டறைகள், நகைக் கடைகள் நிறைந்துள்ள தெலுங்குவீதி, பெரியகடை வீதி, செல்வபுரம்,ராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் தினமும் 40முதல் 100 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து வருகிறார்கள். மேலும் கோவையில் பிரபல நகைக் கடை உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதனால் தங்க நகைகள் மூலம் கொரோனா பரவுகிறதோ என்ற அச்சம் கோவை சுகாதாரத்துறைக்கு எழுந்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தங்கம் போன்ற உலோகங்களில் 10 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிருடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனால் நகைக்கடைகள், பட்டறைகளில் நகையை ஒருவர் பின் ஒருவராக தொடுவதன் மூலம் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு அமைந்துள்ளது.
மட்டுமின்றி இதுபோன்ற பட்டறைகளில் நெருக்கமாக இருக்கும் இடத்தில் அதிகமானோர் பணிபுரிவதால் இந்த நோய்த்தொற்று ஏற்படும். வீட்டில் நடக்கும் திருமணங்கள் போன்ற விஷயங்களுக்காக அருகிலிருக்கும் மாவட்டங்களான ஈரோடு, திருப்பூரிலிருந்து நகைகள் மற்றும் துணிகள் எடுப்பதற்காக கோவைக்கு வருகின்றனர்.
இதன் மூலமாகவும் தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளது பொதுமக்களை கடையில் அரை மணி நேரத்திற்கு மேல் இருக்க அனுமதிக்க கூடாது, அனைவருக்கும் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திய பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும். சுமார் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமிநாசினி கொண்டு கையை சுத்தம் செய்யவேண்டும் ,அதிக அளவு கடையில் வாங்குவதை முடிந்தவரை பொதுமக்களும் தவிர்க்க வேண்டும் அவசியமின்றி கடைகளுக்கு செல்வதை தவிர்த்து விடவேண்டும் தவிர்க்க முடியாத காரணங்கள் அமைந்தால் ஒன்று அல்ல இரண்டு பேர் கடைக்கு சென்று வரலாம் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.