தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை:
கொரோனா பாதிப்பு :
தமிழகத்தில் கொரோனா தொற்றிற்கு ஆளாகி வரும் அரசியல் கட்சித் தலைவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமைச்சர்கள் உள்பட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். ஆனால், தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
இதுதவிர, தேசிய அளவிலும் பல முன்னாள் எம்.எல்.ஏ.க்கள். முன்னாள் அமைச்சர்களும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சைதை எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுதவிர, மு.க.ஸ்டாலினை கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்த தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அண்ணா அறிவாலயத்தில் பரிசோதனை:
இதன்காரணமாக, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பணிபுரியும் அனைவருக்கும் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தனியார் மருத்துவமனை ஊழியர்கள் இந்த பரிசோதனையை மேற்கொண்டனர்.




