பட்டுக்கோட்டை கொரோனா சிறப்பு முகாமில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு ஐந்து நாட்களாக சிகிச்சை அளிக்காமல் டிஸ்சார்ஜ் செய்ததுடன் அவர்களை பக்கத்து கிராமத்தில் விட்டு சென்றதால் அந்த ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அடுத்த கழனிவாசலில் கடந்த 22ம் தேதி கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. இந்த முகாமில் 100 நாள் வேலை தொழிலாளர்கள் 108 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 25ம் தேதி வந்த பரிசோதனை முடிவில் 28 பேருக்கு கொரொனா தொற்று உறுதியானது.
முதலில் முகாமுக்கு செல்ல மறுத்தவர்களை ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம், பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று கொரோனாவால் பாதித்தவர்களை கண்டறிந்து பட்டுக்கோட்டை சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
ஐந்து நாள் சிகிச்சை முடிந்து அனைவரும் மகப்பேறு வாகனம் மூலம் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்களை அவர்களது சொந்த ஊரான கழனிவாசலில் இறக்கி விடாமல் பக்கத்து ஊரான நாட்டானிக்கோட்டையில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். இதனால் கொரோனா சிகிச்சை பெற்று திரும்பி வந்தவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஐந்து நாட்களாக தங்களுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை எனவும், ஹோட்டலில் மட்டும் சாப்பாடு வாங்கி கொடுத்தார்கள், மகப்பேறு வாகனத்தில் அழைத்து வந்ததும் இன்றி பக்கத்துக் கிராமத்திலேயே இறக்கி விட்டுவிட்டனர், கொரோனா பரிசோதனை முற்றிலும் தவறானது எனவும் மறியலில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
தகவலறிந்து அங்கு வந்த பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி, ஆணையர்கள் கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் பேராவூரணி வசந்தா, சேதுபாவாசத்திரம் அண்ணாத்துரை ஆகியோர் ச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. காலை 9 மணிக்கு துவங்கிய மறியல் போராட்டம் மதியம் 3 மணி வரை நடந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.