வங்கிகளில் வாங்கிய கடனை வசூலிக்க வீட்டுக்கு குண்டர்களை அனுப்பி மிரட்டினால், புகார் அளிக்கலாம் என காவல் துறை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையில், வங்கிகள் மற்றும்நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் வங்கிகளின் நெருக்கடிகளால் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.
கடன் பெற்றவர்களிடம் தவணையை வசூலிக்க, அவர்களுக்கு செல்போனில் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும், வங்கி முகவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவமானப்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கட்டப்படாத தவணைக்கு அபராதம் விதித்து கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கடனுக்கான மாதத் தவணை செலுத்த 6 மாதங்கள் தளர்வு அளிக்கப்பட்டாலும், தவணையை செலுத்தாதவர்களிடம் வட்டிக்கு வட்டிவ சூலிப்பது, வங்கிக் கணக்கில்இருக்கும் பணத்தைப் பிடித்துக்கொள்வது ஆகிய நடவடிக்கைகளில் வங்கிகள் ஈடுபட்டிருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், ‘வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், வீட்டுக்கு நேரடியாக ஆட்களை அனுப்பி பணத்தை கேட்பதற்கும், மிரட்டுவதற்கும்எந்த அதிகாரமும் கிடையாது.
வங்கிகளில் வாங்கிய கடனுக்காக வீட்டுக்கு குண்டர்களை அனுப்பி மிரட்டினால், உடனே காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தகவல் கொடுங்கள். அல்லது அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். வீட்டுக்கு வந்த நபர் மீதும், அவரை அனுப்பிய வங்கி மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு அதிகாரம் உள்ளது’ என்று காவல் துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.