கொரோனா தொற்றின் தீவிரம் சற்றே தலைதூக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாளய அமாவாசையை முன்னிட்டு, நாளையும் நாளை மறுநாளும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை மாலை முதல் நாளை மறுநாள் புதன்கிழமை வரை மகாளய அமாவாசை என்பதால் கூட்ட நெரிசல் ஏற்படும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சாமி தரிசனம் செய்யவும், பக்தர்கள் கடற்கரையில் புனித நீராடவும் தடை விதித்துள்ளது.

எனவே மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்றே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரகணக்கான பக்தர்கள் திருக்கோயில் வளாகத்திற்கு எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி,முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து தர்பணம் கொடுத்தனர். அதனை தொடர்ந்து கூட்ட நெரிசல் அதிகமானதால் திருக்கோவில்; வளாகத்தை சுற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பின் திருக்கோவிலுக்குள் சென்று பல மணி நேர காத்திருப்பிற்கு பின் சுவாமி தரிசனம் செய்தனர்.




