திண்டுக்கல் மாவட்டத்தில் 18 மாத குழந்தை கடலைப் பருப்பைத் தின்றபோது, தொண்டையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோரின் சிறு கவன குறைவும் குழந்தைகளை வெகுவாக பாதிக்கக்கூடும். இதற்கு சான்றாய் எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்தாலும், அதை வெறும் செய்தியாக மட்டுமே பலரும் கடந்து செல்கின்றனர். இதனால், பல அசம்பாவிதங்களும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் திண்டுக்கல்லில் பெற்றோரின் கவன குறைவால், 18 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
வேடசந்தூர் அருகேயுள்ள செங்குளத்துப் பட்டியைச் சேர்ந்த விஜய் என்பவரது 18 மாத குழந்தை தான் தர்ஷனா. கடந்த திங்கட்கிழமையன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தர்ஷனா, அருகே இருந்த கடலைப் பருப்பை அதிகளவு சாப்பிட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாகக் கடலைப் பருப்பு தர்ஷனாவின் தொண்டையில் சிக்கியதில், மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்ட தர்ஷனா மயங்கி விழுந்துள்ளார்.
இதைப் பார்த்த தர்ஷனாவின் பெற்றோர் உடனடியாக குழந்தையைத் தூக்கிக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 2 தினங்கள் சிகிச்சை பெற்றுவந்து வந்த தர்ஷனா சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் உள்ள குழந்தை என்ன செய்கிறது என்பதை கூட கவனிக்காமல், பெற்றோர் கவனகுறைவுடன் இருந்ததால் 18 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.