மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிராக வரும் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சென்னை:
அனைத்துக்கட்சி கூட்டம்:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்னணன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வி.சி.க. தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம் பின்வருமாறு:-
புதிய வேளாண் சட்டம்:
மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தாமல், சர்வாதிகாரமாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் தொடர்பான சட்டங்கள் சமூக விரோதச் செயலுக்கு வழி செய்கிறது.
மாநிலங்களவையின் விதிகளை மீறி நிறைவேற்றியிருக்கும் இந்தச் சட்டங்களைக் கொண்டு வந்திருக்கும் மத்திய அரசுக்கும்,- அவற்றை ஆதரித்திருக்கும் அ.தி.மு.க. அரசுக்கும், இந்தக் கூட்டம் வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது.
சீர்குலைக்கு முயற்சி:
“அத்தியாவசியத் திருத்தச் சட்டத்தில்” கார்ப்பரேட்களுக்கு சாதகமான நிபந்தனைகளை விதித்திருப்பது, “சுதந்திரமான வேளாண் சந்தையில்” குறுக்கிட்டு, அதன் இயல்பான போக்கைப் பாதித்து, விவசாயிகளின் விளை பொருட்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச விலை கூட கேள்விக்குறியாகும் சூழல் உருவாகும்.
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுத்து, ‘பி.எம்.கிஸான்’ திட்டத்திலும் ஊழல் முறைகேட்டிற்கு வித்திட்டுள்ள பா.ஜ.க., அ,தி.மு.க. அரசுகள் – இந்தச் சட்டங்களின் மூலம் வேளாண் துறையைச் சீர்குலைக்க முற்பட்டுள்ளது.
அகில இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையை இந்தக் கூட்டம் வழிமொழிகிறது. செப்டம்பர் 25ம் தேதி அன்று நடைபெறவிருக்கும் அவர்களது போராட்டத்தை வரவேற்கிறது.
28-ம் தேதி ஆர்ப்பாட்டம்:
தமிழகத்தில் விவசாயிகளை வஞ்சிக்கும் பா.ஜ.க. – அ.தி.மு.க. அரசுகளின் போக்கு மிகுந்த வேதனைக்குரியது. இந்த சட்டங்களின் வளையத்திற்குள் ஏழை விவசாயிகளை சிக்கவைத்து, அவர்களைத் தொடர்ந்து துன்பங்களுக்குள்ளாக்கி, கூட்டாட்சித் தத்துவத்தை மேலும் மேலும் கேள்விக்குறியாக்கும் முயற்சி என்பதால், இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும், ஆளும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும் 2020 செப்டம்பர் 28 (திங்கட்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் மாவட்டத் தலைநகரங்களிலும் – நகராட்சி மற்றும் ஒன்றியங்களிலும் “கொரோனா” பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்து, தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




