திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.

திமுகவில் சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக , பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகள் காலியாக உள்ளன. தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு கட்சி அமைப்பை வலுப்படுத்தும் விதமாக காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
வரும் 9ம் தேதி காணொலி மூலம் நடைபெறவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் பதவி மற்றும் பொருளாளர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான விண்ணப்பங்கள், கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மனுத்தாக்கல் நடைபெற்றது. இதில், பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அதேபோல, பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து, பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாளை இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில், வரும் 9ம் தேதி காணொலி காட்சி வாயிலாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள, பொதுக்குழு கூட்டத்தில் இறுதி முடிவு வெளியிடப்பட உள்ளது.




