2021 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி தொடரும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்ட தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்றும், அதை வரவேற்பதாகவும், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தால், அங்கும் தமிழக அரசு உரிய அழுத்தம் தந்து வாதாட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய பாலகிருஷ்ணன், பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கும் தமிழக அரசு, வருவாயைக் கருத்தில் கொண்டே டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும், மதவாத சக்திகளுக்கு எதிராக திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற கூட்டணி வரும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்றும், புதிய கட்சிகளின் வருகைக் குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.
இறுதியாக பேசிய கே.பாலகிருஷ்ணன், பெண் ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்தி பேசியவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், இடதுசாரிகள் சார்பில் காவல் ஆணையர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.