வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் பழைய கட்டிடங்களில் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கி பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மட்டுமின்றி திருவண்ணாமலை, கடலூர், நெல்லை உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
பருவமழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது அறிவிப்பு, எச்சரிக்கை போன்றவற்றை விடுத்து வருகிறது. இந்நிலையில், மழைக்காலங்களில் ஏற்படும் ஆபத்து மற்றும் விழிப்புணர்வு குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில்,
தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ அல்லது ஆற்றைக் கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி பழைய கட்டிடங்களில் தங்குவதோ அல்லது அவற்றுக்கு அருகில் செல்லவோ வேண்டாம். பழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்களும் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ அல்லது கடந்து செல்லவோ வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இடி – மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, ;மரத்தின் அடியில் நிற்க கூடாது; திறந்தவெளியில் இருக்கக் கூடாது; குடைகளை உபயோகப்படுத்தக் கூடாது, போன்ற அறிவுறுத்தல்கள் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வெளியிடப்பட்டுள்ளது.