
ஆசைக்கு இணங்கல் மறுத்த தம்பி மனைவி மற்றும் அவருடைய இரண்டு வயது குழந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற அண்ணன், சடலங்களை எரிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா (30). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆனால் இவருடைய 27 வயது தம்பி சிவக்குமார், அஞ்சலை (21) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை இருந்தது. மேலும் இரண்டாவது முறையாக அஞ்சலை கருவுற்று இருந்தார்.
நேற்று முன்தினம் புளி வியாபாரம் செய்வதற்காக சிவக்குமார் வெளியூர் சென்றுவிட்டார். அஞ்சலை குழந்தையுடன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். நேற்று விறகு வெட்டுவதற்காக குழந்தையை தூக்கிக் கொண்டு தன்னுடைய தோட்டத்துக்கு சென்றுள்ளார். அங்கு கணவர் சிவக்குமாரின் அண்ணன் கருப்பையா இருந்துள்ளார்.
இருவரும் பேசிக் கொண்டிருந்த போது கருப்பையா அஞ்சலையிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அதற்கு அஞ்சலை உடன்படவில்லை. இதனால் எழுந்த ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து சராமாரியாக அஞ்சலையை வெட்டியுள்ளார் கருப்பையா. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அருகிலிருந்த குழந்தை கதறி அழுதுள்ளது. அதையும் ஈவு இரக்கமின்றி கருப்பையா வெட்டிக் கொன்றார். இரண்டு சடலங்களையும் எடுத்து எரிக்க முயன்றுள்ளார். அப்போது நீண்ட நேரமாக புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து விசாரணை நடத்தியதில் கருப்பையா தம்பி குடும்பத்தை கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப்பதிந்த காவல்துறை கருப்பையாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




