குடியாத்தம் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதாப் சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னை:
சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப்சாஹு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
வாக்காளர் பட்டியல் திருத்தம்:
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, இணையம் மற்றும் நேரடியாக செப்டம்பர் 20-ம் தேதி வரை 5 லட்சத்து 51,408 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் புதிதாக பெயர் சேர்க்க 1 லட்சத்து 66,408 பேர் படிவம்-6 மூலமாகவும், பெயர் நீக்க 2 லட்சத்து 37 ஆயிரத்து 248 பேர் படிவம்-7 மூலமாகவும் விண்ணப்பித்துள்ளனர்.
சரிபார்ப்பு :
தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் இணையம் மூலமாக வாக்காளர் பட்டியலை சரிபார்த்தது. அப்போது அதில் 56 ஆயிரம் இரட்டை பதிவுகள் இருப்பதை கண்டுபிடித்து, தமிழகத்துக்கு அனுப்பி மீண்டும் சரிபார்க்கும்படி கூறியுள்ளது. மாதம்தோறும் இதுபோன்ற தகவல்களை தமிழகத்துக்கு அனுப்பி வருகிறது. இரட்டை பதிவுகளை கணினி மூலம் சரிபார்க்கும் பணி மாவட்ட வாரியாக நடந்து வருகிறது.
இடைத்தேர்தல் எப்போது?
குடியாத்தம், திருவொற்றியூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.




