புதிய வேளாண் மசோதாவிற்கு எதிராக தமிழக அரசு நீதிமன்றம் செல்லாவிட்டால், தி.மு.க. நிச்சயம் செல்லும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்:
தி.மு.க. தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது:-
விவசாயிகளுக்கு விரோதம்:
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய அரசு என்றால்; மாநில அரசு விவசாயிகளைக் காலில் போட்டு மிதிக்கிறது. பிரதமர் தன்னை ‘ஏழைத் தாயின் மகன்’ என்று சொல்கிறார். இந்த ஏழைத் தாயின் மகன் ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஏராளமான இந்திய மக்கள் ஏழைகள் ஆனார்கள். புதிது புதிதாக ஏழைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஏழைத் தாயின் மகன்.
மாநில முதல்வர் தன்னை ‘விவசாயி’ என்கிறார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் விவசாயிகளின் வாழ்க்கையே பறிபோகிறது. ஏழைத் தாயின் மகனும், இந்த விவசாயியும் சேர்ந்து ஏழை மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்த நன்மையும் செய்யவில்லை; தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமான செயல்களை, கெடுதல்களைச் செய்கிறார்கள். .
நன்மை உண்டா?
மூன்று சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏதாவது நன்மையுண்டா? இந்தச் சட்டங்களால் விவசாயிகள் பின்தங்கி விடுவார்கள். நிலத்தில் இருந்து துரத்தப்படுவார்கள்.
பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான பஞ்சாப் மாநில சிரோமணி அகாலி தளம் இந்தச் சட்டங்களை எதிர்க்கிறது. அந்தக் கட்சி கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து கூட்டணியில் இருந்து விலகியிருக்கிறார்கள். அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜினாமா செய்திருக்கிறார்.
நீதிமன்றம் செல்வோம்:
மத்திய அரசு எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும் தி.மு.க.வும், தி.மு.க. கூட்டணி கட்சிகளும் எதிர்க்கின்றன என்று சிலர் தவறான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். அதைப் பற்றிக் கவலையில்லை. மக்களுக்கு விரோதமான சட்டம் எதுவாக இருந்தாலும் அதனைக் கடுமையாக எதிர்ப்போம். இந்த விவசாயச் சட்டங்களை இந்தியாவே எதிர்க்கிறது – போராடுகிறது.
தமிழக அரசு நீதிமன்றம் செல்லவேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால், அதைச் செய்யத் தமிழக அரசு முன்வரவில்லை. தமிழக அரசு நீதிமன்றம் செல்லாவிட்டால் தமிழக மக்களின் சார்பாக எதிர்க்கட்சியான நாங்கள் நீதிமன்றத்துக்குச் செல்வோம்.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையைக் கட்டக்கூடாது என்று பிரதமரைச் சந்தித்து வற்புறுத்தினாரா முதல்வர்?
போலி விவசாயி:
எட்டுவழிச் சாலையை எதிர்க்கும் விவசாயிகளை அழைத்துப் பேசியிருக்கிறாரா எடப்பாடி? விவசாயக் கடன்களை வட்டியைத் தள்ளுபடி செய்யமாட்டேன் என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று மேல் முறையீடு செய்தது யார்? இந்தப் ‘போலி விவசாயி’யை மக்கள் நம்பமாட்டார்கள்.
மோடி. ஆட்சியில்தான் விவசாயிகள் தற்கொலைகள் தொடர்கின்றன. இந்தச் சட்டத்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன்பெறும். ஒட்டுமொத்த மக்கள் விரோத ஆட்சியை மத்திய அரசு நடத்தி வருகிறது.
அடுத்தகட்ட போராட்டம்:
வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு உதவிகள், சலுகைகள், திட்டங்கள், பண உதவிகள் – உண்டா? மோடி மக்களுக்கு ஆயிரம் லட்சம் கோடி – லட்சம் கோடி என்று அறிவிப்பாரே தவிர, சாமானியர்களுக்கு எதுவும் வந்ததா?கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, அடுத்தகட்டப் போராட்டத்தை அறிவிப்போம். நிச்சயம் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராடுவோம் என்று அவர் பேசினார்.




