சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளதால் அதிமுக கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.
ஆனால் மேல்முறையீட்டில் நீதிபதி குமாரசாமி அவர்களை விடுதலை செய்தார். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி, ஜெயலலிதா மறைந்த நிலையில், 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா இறந்து விட்டதால் அவரை வழக்கில் இருந்து நீக்கிய உச்சநீதிமன்றம், மற்ற 3 பேருக்கும் குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017, பிப்ரவரி 15-ம் தேதி முதல் அடைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே தண்டனைக் காலம் முடியவுள்ள நிலையில் அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி சிறைச்சாலையில் சசிகலா கழித்த நாட்கள் தொடர்பான விவரங்களை பெற்றுள்ளார். அதில், 14.2.2021ம் தேதியோடு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை காலம் முடிவு பெறுகிறது.
6.10.2017 முதல் 12.10.2017 வரை 5 நாள்களும், 20.3.2018 முதல் 31.3.2018 வரை 12 நாள்களும் பரோலில் சசிகலா வெளியே வந்துள்ளார். மொத்தம் 17 நாள்கள் வெளியே வந்திருக்கிறார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பரோல் தினத்தையும் கூட்டினால், 2021 மார்ச் 3ம் தேதி சசிகலா ரிலீஸ் ஆக வேண்டியிருக்கும் எனத் தெரிகிறது. ஆனால், ஏற்கனவே இதே வழக்கில் சசிகலா 35 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
அந்த நாட்களை கழித்தால், ஜனவரி 27-ம் தேதி சசிகலா ரிலீஸ் ஆகிறார். சட்டசபை தேர்தல் விடுதலை தேதி என்ற ஒன்றை சிறை நிர்வாகம் கூறவில்லை இருந்தபோதும். கணக்குப்படி, கழித்துவிட்டு பார்த்தால் ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக உள்ளார்.
சசிகலா விடுதலை தேதி உறுதியாகியுள்ள நிலையில் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் கட்சித் தலைமை அவரிடம் வழங்கப்படுமா அல்லது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் கட்சித் தலைமை இருக்குமா என்ற கேள்விகள் குறித்து கட்சியினர் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.