தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ரூபாய் 4,321 கோடியை ஒரே தவணையாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் மத்திய நிதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 42-வது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தமிழக அரசின் அமைச்சர் ஜெயக்குமார் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:-
2017-18ம் ஆண்டில் வழங்கப்பட வேண்டிய ஒருங்கிணைந்த ஜி,எஸ்.டி. வரி தீர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு தனது அறிக்கையை முடிவு செய்து, தமிழகத்திற்கு ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி நிலுவையாக ரூ.4,321 கோடி வழங்கப்பட வேண்டும் என ஒப்புக் கொண்டுள்ளது.
ஒரே தவணை:
அமைச்சர்கள் குழு பரிந்துரையின்படி, தமிழகத்திற்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையினை ஒரே தவணையில் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இது கோவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள கடும் நிதிச்சுமையைக் குறைக்க பேருதவியாக இருக்கும். எனவே, நிதியை உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டிற்கு 2020-21 ஆம் ஆண்டில், ஜூலை 2020 வரையிலான காலத்திற்கு ரூ.12,258.94 கோடி இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது. கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராட ஜி.எஸ்.டி. வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவது மிகவும் அவசியம்.
கொரோனா தடுப்பு :
27.08.2020 அன்று நடைபெற்ற முந்தைய மன்றக் கூட்டத்தில், மதிப்பிற்குரிய மன்றத்தலைவர் இரண்டு விருப்பத் தேர்வுகளை மாநிலங்களுக்கு அளித்தார். இந்த இரண்டு விருப்பத் தேர்வுகளும் மாநிலங்கள் சந்தையிலிருந்து கடன் பெறுவது தொடர்பானவை ஆகும்.
2020-21ம் ஆண்டில் மொத்த கடன் தொகையை கட்டுப்படுத்தும் முயற்சியில், விருப்பத் தேர்வு 1-இன் கீழ் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி செயல்படுத்தல் தொடர்பான இழப்புகள் மற்றும் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட இழப்புகளுக்கு இடையே ஒரு வேறுபாடு உருவாக்கப்பட்டது.
ஒப்பந்தத்தை மீறும் செயல்:
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி கணக்கின் கீழ் மட்டுமே இழப்புகளைக் கொண்டு வருவதற்கான எந்தவொரு முயற்சியும், சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்த மதிப்புமிக்க மன்றம் மிகவும் முக்கியமானதாக கருதிய மாநிலங்கள் மற்றும் மத்திய அரசிடையே உள்ள நுட்பமான சமநிலை ஒப்பந்தத்தை மீறுவதாக அமையும்.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் அடித்தளமாக இருக்கும் பரஸ்பர நம்பிக்கையைப் பாதுகாத்து, உரிய நேரத்தில் மாநிலத்திற்கு இழப்பீடு வழங்குவதிலும், ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் நிலுவைத் தொகையை விரைவாக அளித்திடவும், உங்கள் வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.