தமிழகத்தில் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலூர், தஞ்சை, நாகை, மதுரை, தேனி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
நாகை, ஈச்சன்விடுதியில் தலா 9 சென்டிமீட்டர் மழையும், ராமநாதபுரத்தில் 8 சென்ட்டிமீட்டர் மழையும், மண்டபம், திருத்துறைபூண்டி, பாபநாசத்தில் தலா 7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது. இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெய்த மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5-ம் வகுப்பு மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார்.