சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் தாய் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்ட விவகாரம் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அச்சிறுமியின் தாய் இந்திராணி, இரண்டாவது கணவர் சையத் அலி, இடைத்தரகர் மாலதி மற்றும் ஆதார் திருத்தம் செய்த ஜான் ஆகியோரை கைது செய்தனர்.
கைதான 4 பேரிடம் தமிழக அரசின் உயர்மட்ட அதிகாரிகள் தனித்தனியே விசாரணை நடத்தி ஆய்வறிக்கையை தமிழக அரசுக்கு சமர்ப்பித்தனர். இந்த ஆய்வறிக்கையின்படி கருமுட்டை விவகாரத்தில் சுதா மருத்துவமனை உள்பட 4 மருத்துவமனை ஸ்கேன் சென்டர்கள் சீல் வைக்கபட்டன. இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி ஈரோடு மற்றும் சேலம் சுதா மருத்துவமனை சீல் வைத்து நிரந்தரமாக மூடப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி அச்சிறுமியின் தாய் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையில் இருக்கும் 4 பேருக்கும் வழங்கப்படவுள்ளது.




