அக்டோபர் 5ம் தேதி முதல் ஓராண்டுக்கு வள்ளலார் முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருவருட் பிரகாச வள்ளலார் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் தலைமையில் 14 பேர் கொண்ட சிறப்புக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் கூட்டம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: வள்ளலாரின் பெருமையை பறைசாற்றும் வகையில் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி ஓராண்டுக்கு அதாவது, 52 வாரங்களுக்கு “வள்ளலார் 200” என்ற தலைப்பில் முப்பெரும் விழா நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விழா இலச்சினையை (லோகோ)வெளியிடுவது, அதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், விழாவின் தொடக்க நிகழ்ச்சியை எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வள்ளலாரின் வழிகளை பின்பற்றுகிற சபையை சார்ந்தவர்கள், வள்ளலார் மீது பேரன்பு கொண்டவர்களை அழைத்து முதல் 10 நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தேர்தல் அறிக்கையில் அறிவித்ததுபோல் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோயில்களில் ‘அன்னை தமிழில் வழிபாடு’ திட்டத்துக்கு புத்துயிரூட்டும் வகையில், 48 கோயில்களில் முழுமையாக அன்னை தமிழில் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.