திருவொற்றியூரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்கு சுகாதாரமற்ற முறையில் குப்பை வண்டிகளில் உணவு வழங்கும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது

இதை கவனித்த மனித உரிமை ஆணையம்
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் துப்புரவுப் பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொடுத்து அனுப்பியது ஏன் என்று விளக்கம் அளிக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்க்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபடும் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்படுகிறது. அந்த அந்த மண்டலங்களில் உணவு தயாரிக்கப்பட்டு துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உணவு பாக்கெட் செய்யப்பட்டு கொடுத்து அனுப்பப்படுகிறது. தினமும் 2500க்கும் மேற்பட்டவர்களுக்கு இப்படி உணவு வழங்கப்படுகிறது.

திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட 14 வார்டுகளில் கொரோனா தடுப்பு பணியில் நூற்றுக்கணக்கான களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு, மதிய உணவு திருவொற்றியூர் வன்னியர் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தயாராகிறது. அங்கு சமைத்த உணவுகளை பொட்டலங்களாக அந்தந்த வார்டுகளுக்கு கொண்டு சென்று களப்பணியாளர்கள், தன்னார்வலர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இந்த உணவுகள் சுகாதாரமான முறையில் கொண்டு வரப்படுவது இல்லை. மாநகராட்சி குப்பை வண்டிகளில் அள்ளிப்போட்டு கொண்டுவந்து கொடுக்கின்றனர். தங்களுக்கு பாதபூஜை, மலர் மாலை எல்லாம் வேண்டாம், ஒரு வேளை உணவை மரியாதையாகக் கொடுத்தால் போதும் என்று பலரும் கண்ணீர்விட்டனர். ஆனாலும் குப்பை வண்டியில் உணவு கொண்டு செல்லப்படுவது தொடர்ந்தது.
இந்த நிலையில் திருவொற்றியூர் பகுதியில் கொண்டு வரப்பட்ட உணவில் புழு நெளிந்ததால் துப்புரவுத் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது ஊடகங்களில் பெரிய செய்தியாக வந்தது. இதை தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

கொரோனா களப்பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு விநியோகம் செய்யப்படுவது ஏன் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இனியாவது துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.