சென்னையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டு உரிமம் பெறப்பட்ட இறைச்சி கூடங்களில் மட்டுமே விலங்குகள் வெட்டப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
இஸ்லாமிய மக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக பக்ரீத் பண்டிகைகளில் இஸ்லாமியர்கள் அனைவரும் மசூதி அல்லது திடல்களுக்குச் சென்று சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம். தற்போது நாடெங்கும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், பக்ரித் பண்டிகையை ஒட்டி பொதுவெளியில் மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளை பலியிடுவதற்கும், இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்க கோரி மதுரை வடஇந்தியர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஹூக்கம் சிங் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ”பக்ரீத் பண்டிகை நெருங்கி விட்டதையும், தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பொது இடங்களில் விலங்குகள் பலியிட தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் தற்போது, சென்னையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெறப்பட்ட இறைச்சி கூடங்களில் மட்டுமே விலங்குகள் வெட்டப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மத நிகழ்வுகளின் போதும், வழிபாடுகளின் போதும் இறைச்சிக்கு என விலங்குகள் வெட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி பக்ரீத் பண்டிகைக்காக அனுமதி பெற்ற இறைச்சி கடைகளில் மட்டுமே விலங்குகள் வெட்ட வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.